தேடுதல்

இந்தியாவில் இடம்பெறும் பாலியல் வன்கொடுமைக்கு  எதிர்ப்பு இந்தியாவில் இடம்பெறும் பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு 

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு

இந்தியாவில் இடம்பெறும் பாலியல் வன்கொடுமை பிரச்சனைகளைக் களையும் நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதற்கு வயது முதிர்ந்தோரும் பலியாகின்றனர் - வாசை பேராயர் மச்சாடோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் தலைநகர் பகுதியில் இடம்பெற்றுள்ள, பெண்கள், மற்றும், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள், மனிதமற்றவை, மற்றும், இவை, மனித உரிமைகளைக் கடுமையாய் மீறுவதாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று, இந்திய கத்தோலிக்க பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.

டெல்லியின் மேற்குப் பகுதியில், 13 வயது தலித் சிறுமி ஒருவர், அவர் வேலைசெய்த பண்ணையாரின் உறவினர் ஒருவரால், அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டுள்ளார். அச்சிறுமியின் உடல் பரிசோதனையில், அவரது முகத்திலும், மற்ற இடங்களிலும் ஆழமான காயங்கள் இருந்தன எனத் தெரியவந்துள்ளது.

இந்த வன்கொடுமை குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் பேராயர் ஃபெலிக்ஸ் மச்சாடோ அவர்கள், அதிகரித்துவரும் இந்த வன்கொடுமைகள் குறித்து, அரசியல் கட்சிகள் மௌனம் காப்பது, மனதிற்கு மிகுந்த கவலையளிக்கிறது என்று கூறினார்.

தலித் சிறுமிக்கு நேர்ந்துள்ளது, மனிதமற்றது, மற்றும், ஏற்கமுடியாதது என்று கூறியுள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், வெட்கப்படக்கூடிய இக்கொடுமைகள், கடுமையான மனித உரிமைகள் மீறல்களாகக் கருதப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சனை குறித்து, பல ஆண்டுகளாக, நிறைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் அப்பிரச்சனைகளைக் களையும் நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும், இவ்வன்முறை பரவிவருகிறது என்றும், இதற்கு வயது முதிர்ந்தோரும் பலியாகின்றனர் என்றும், பேராயர் மச்சாடோ அவர்கள் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த மாதத்தில், இந்துமத உயர்மட்ட வகுப்பினரால் 7 தலித் குடும்பங்கள், பொதுவில் கட்டி வைக்கப்பட்டு அடிக்கப்பட்டன. இக்குடும்பத்தினரில் மூன்று பேர் வயதுமுதிர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews)

03 September 2021, 15:12