தேடுதல்

வாழ்வுக்கு ஆதரவான போராட்டம் வாழ்வுக்கு ஆதரவான போராட்டம்  

கருக்கலைப்புக்கு எதிராக கிறிஸ்தவர்களின் 40 நாள் செப முயற்சி

உலகில் நிகழும் மரணங்களுக்கு முக்கியமானக் காரணிகளுள், கருக்கலைப்பு, முக்கிய இடம் வகிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், உலகில், 4 கோடி கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவில் சட்ட ரீதியாக கருக்கலைப்பைத் தடுக்கும் அதிகாரம் திருஅவைக்கு இல்லாத நிலையில், செபத்தின் வழியாக அதனை நிறைவேற்றும் நோக்கத்தில், 40 நாள் செப முயற்சியில் இணைந்துள்ளதாக, தென் கொரிய தலத்திருஅவை அறிவித்தது.

மனித வாழ்வு பாதுகாக்கப்படவேண்டும், மற்றும் கருக்கலைப்பை சட்டரீதியாக அங்கீகரிப்பதை நிறுத்தவேண்டும் என, தொடர்ந்து குரல் எழுப்பிவரும் தென்கொரிய திருஅவை, கருக்கலைப்புக்கு எதிராக, செப்டம்பர் 22ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி முடிய, உலக அளவில் இடம்பெறும் 40 நாள் செப முயற்சியில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

கருக்கலைப்பு எனும் அநீதிக்கு எதிராக, 2007ம் ஆண்டில், வாழ்வுக்கு ஆதரவான குழுவால், அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 40 நாள் செப முயற்சியில், இந்த ஆண்டு, தென் கொரியாவும் இணைந்துள்ளது. இந்த 40 நாள் செப முயற்சியானது, 63 நாடுகளின் 1000 நகர்களில், 10 இலட்சம் தன்னார்வ ஆதரவாளர்களுடன் நடத்தப்படுகிறது.

இந்த 40 நாள் முயற்சிக்கென தனிச்செபம் ஒன்றைத் தயாரித்து, மக்களிடையே விநியோகித்துள்ள கொரிய தலத்திருஅவை, இந்த 40 நாள் செப முயற்சியில் பங்கு கொள்ளும் கிறிஸ்தவர்கள், அந்நாட்களையும் தாண்டி, கருக்கலைப்புக்கு எதிரான தங்கள் முயற்சிகளைத் தொடரவேண்டும் என விண்ணபித்துள்ளது.

வாழ்வுக்கு ஆதரவான இந்தக் குழுவின் முயற்சியால், இதுவரை, 19,198 குழந்தைகள், கருவிலேயே காப்பாற்றப்பட்டு, பிறப்பைக் கண்டுள்ளனர். 221 பேர், கருக்கலைப்பு தொடர்புடைய தொழிலைக் கைவிட்டுள்ளனர், கருக்கலைப்பு செய்துவந்த 112 சிறு மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

உலகில் மரணங்களுக்கு முக்கியமானக் காரணிகளுள் கருக்கலைப்பு முக்கிய இடம் வகிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் உலகில் 4 கோடி கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று, ஒவ்வோர் ஆண்டும், 40 நாள் செப முயற்சியை உலகெங்கும் மேற்கொண்டுவரும், வாழ்வுக்கு ஆதரவான கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது. (UCAN)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2021, 14:34