தேடுதல்

செப்டம்பர் 1ம் தேதி துவங்கும் படைப்பின் காலம் செப்டம்பர் 1ம் தேதி துவங்கும் படைப்பின் காலம்  

"பூமியின் அழுகுரல், வறியோரின் அழுகுரல்" - மேய்ப்புப்பணி மடல்

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள துன்பங்களைவிட, சுற்றுச்சூழலின் சீரழிவால் உருவாகும் துன்பங்கள் அதிகக் கொடுமையாக இருக்கும் - பேராயர் Farrell

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 1, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட படைப்பை பாதுகாக்கும் உலக செப நாளையொட்டி, அயர்லாந்தின் டப்ளின் உயர்மறைமாவட்டப் பேராயர் Dermot Farrell அவர்கள், "பூமியின் அழுகுரல், வறியோரின் அழுகுரல்" (The Cry of the Earth, the Cry of the Poor) என்ற பெயரில் மேய்ப்புப்பணி மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நமது சமுதாயமும், சுற்றுச்சூழலும் எவ்வளவுதூரம் நலிவுற்றுள்ளது என்பதை, கோவிட்-19 பெருந்தொற்று, கடந்த 18 மாதங்களாக நமக்கு ஆழமாக உணர்த்தியுள்ளது என்று தன் மடலில் கூறியுள்ள பேராயர் Farrell அவர்கள், இந்த பெருந்தொற்று உருவாக்கியுள்ள துன்பங்களைவிட, சுற்றுச்சூழலின் சீரழிவால் உருவாகும் துன்பங்கள் அதிகக் கொடுமையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்தின் டப்ளின் உயர்மறைமாவட்டப் பேராயர் Dermot Farrell
அயர்லாந்தின் டப்ளின் உயர்மறைமாவட்டப் பேராயர் Dermot Farrell

தான் உருவாக்கியுள்ள மேய்ப்புப்பணி மடல், கிறிஸ்தவ மதநம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது என்றாலும், அறிவியலும், மருத்துவ இயலும் வழங்கியுள்ள கருத்துக்கள், இம்மடலில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, பேராயர் Farrell அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டுவர இயலாத அளவு சுற்றுச்சூழலில் நாம் இழைத்துவரும் சீரழிவுகளைக் குறித்து, அறிவியலாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள மிக ஆபத்தான 'சிவப்பு குறியீடு' (code red), நம் சுற்றுச்சூழலைக் குறித்து மட்டுமல்ல, மனித இனத்திற்கும் நாம் இழைத்துவரும் கொடுமைகளை நமக்கு நினைவுறுத்துகிறது என்று, பேராயர் Farrell அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

COP26 சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டையொட்டி, 'Healthy Planet - Healthy People', அதாவது, 'நலமான கோளம் - நலமான மக்கள்' என்ற தலைப்பில், உலகத் தலைவர்களுக்கு, திருப்பீடம் வெளியிட்டுள்ள விண்ணப்பத்தில், அயர்லாந்து மக்கள் அனைவரும் கையொப்பமிடுவதில் துவங்கி, படைப்பைப் பாதுக்காக்கும் பல்வேறு பணிகளில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்று, பேராயர் Farrell அவர்களின் மேய்ப்புப்பணி மடல் அழைப்பு விடுத்துள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2021, 14:14