தேடுதல்

ஈராக் திருஅவை ஈராக் திருஅவை 

ஈராக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது

ஈராக் பேராயர்: ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியும், அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதும், எதிர்விளைவுகளைக் கொணரும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதும், ஈராக்கிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடைசித் துருப்புக்களும் வெளியேற உள்ளதும், ஈராக் கிறிஸ்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் அச்சுறுத்தலைத் தருவதாகத் தெரிவித்தார் ஈராக் பேராயர் Bashar Warda.

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியும், அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதும், எதிர்விளைவுகளைக் கொணரும் அச்சம் இருப்பினும், ஈராக்கில் கிறிஸ்தவர்களின் வருங்காலம் சிறப்பாகவே இருக்கும், அதிலும் குறிப்பாக, திருத்தந்தை அந்நாட்டிற்கு மார்ச் மாதம் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்குப்பின் அந்த நம்பிக்கை அதிகமாகப் பிறந்துள்ளது என உரைத்தார், ஏர்பில் பேராயர் Warda.

ஆப்கானிஸ்தானும், ஈராக்கும் இரு வேறு தனி நாடுகள் எனினும், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது, ஈராக்கின் ISIS தீவிரவாதிகளுக்கு ஓர் ஊக்கத்தைத் தரும் வாய்ப்புள்ளது என்று கூறிய பேராயர், இத்தீவிரவாதிகளால் தூண்டப்பட்ட மனநிலை இன்னும் ஈராக்கிலும் சிரியாவிலும் நிலவிக்கொண்டிருப்பதால், பிரச்சனைகள் உருவாகும் ஆபத்து உள்ளது என மேலும் எடுத்துரைத்தார்.

2003ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டுத் துருப்புக்கள் ஈராக்கில் புகுந்ததிலிருந்து 2015ம் ஆண்டு வரையுள்ள காலத்தில், ஒரு பேராயர், 5 அருள்பணியாளர்கள் உட்பட 1,200 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது, மற்றும் 62 கோவில்கள் சேதமாக்கப்பட்டதையும் எடுத்துரைத்த பேராயர் Warda அவர்கள், 2003ம் ஆண்டிற்கு முன்னர் 10 இலட்சம் முதல் 14 இலட்சமாக இருந்த ஈராக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, இன்று 3 முதல் 4 இலட்சமாகக் குறைந்துள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார்.

நாட்டின் நிலையற்ற தன்மை, மற்றும் மோதல்களில் எப்போதும் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மையினரே என்பது ஈராக் வரலாற்றில் நிரூபிக்கப்பட்டு வருகின்றபோதிலும், இந்நாட்டில் கிறிஸ்தவர்களின் வருங்காலம் குறித்த நம்பிக்கை அதிகமாக, அதிலும் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்திற்குப்பின் மேலோங்கியுள்ளதாக எடுத்துரைத்தார், எர்பில் பேராயர் Warda

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2021, 14:24