தேடுதல்

அன்னை மரியாவின் பிறப்பு அன்னை மரியாவின் பிறப்பு  

அன்னை மரியாவின் பிறப்பு விழா மறையுரை

இறைவன் ஆற்றும் செயல்கள், நாம் வாழும் இடங்களில், நம் வாழ்வின் ஒவ்வொருநாள் நிகழ்வுகளின் வழியே நடைபெறுகின்ற்ன என்பதை, அன்னை மரியாவின் பிறப்பு நமக்கு உணர்த்துகிறது - கர்தினால் பெனியமீனோ ஸ்தெல்லா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியாவின் பிறப்பைக் குறித்த சிந்தனைகள், இவ்வுலகில், எவ்வித ஆடம்பரமும் இன்றி, மனிதர்கள் நடுவே அமைதியாக செயலாற்றும் ஆண்டவரின் இதயத்திற்கு நம்மை அழைத்துச்செல்கின்றன என்று, இத்தாலி நாட்டின் கர்தினால் பெனியமீனோ ஸ்தெல்லா (Beniamino Stella) அவர்கள், செப்டம்பர் 8, இப்புதனன்று வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.

இத்தாலியில் அமைந்துள்ள அன்னை மரியாவின் திருத்தலங்களில், புகழ்பெற்ற லொரேத்தோ திருத்தலத்தில், ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 8ம் தேதி, தூய்மை மிகு கன்னி மரியாவின் பிறந்தநாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, இவ்வாண்டு நடைபெற்ற திருவிழாத் திருப்பலியை, அருள்பணியாளர்கள் பேராயத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றிய கர்தினால் ஸ்தெல்லா அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

உலகினரின் கவனத்தை சிறிதும் ஈர்க்காத வண்ணம், எளிமையான யூத தம்பதியருக்குப் பிறந்த ஒரு பெண் குழந்தை, உலக மீட்பரின் தாய் என்பது, பின்னர் வெளியானதுபோலவே, இறைவன் ஆற்றும் ஒவ்வொரு செயலும், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, அதேவேளையில், இவ்வுலகை காக்கும் வண்ணம் நடைபெற்றுவருகின்றது என்று, கர்தினால் ஸ்தெல்லா அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இறைவன் ஆற்றும் செயல்கள், நம்மைச் சுற்றி எப்போதும் நடைபெறுகின்றன என்பதையும், அவரது நற்செய்தி, நாம் வாழும் இடங்களில், நம் வாழ்வின் ஒவ்வொருநாள் நிகழ்வுகளின் வழியே நடைபெறுகின்ற்ன என்பதையும், அன்னை மரியாவின் பிறப்பு நமக்கு உணர்த்துகிறது என்று, கர்தினால் ஸ்தெல்லா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஆண்டவர், தானாகவே தனித்து செயல்படுவதில்லை, அவரது செயல்பாடுகளுக்கு, மனிதர்களாகிய நம்முடைய சம்மதமும், ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன என்று கூறிய கர்தினால் ஸ்தெல்லா அவர்கள், எனவே, கிறிஸ்தவ வாழ்வு என்பது, வேறும் 'பார்வையாளர்கள்' என்ற நிலையிலிருந்து, 'பங்கேற்பாளர்கள்' என்ற நிலைக்கு நம்மை ஒவ்வொரு நாளும் அழைக்கிறது என்று எடுத்துரைத்தார்.

அன்னை மரியா பிறந்து வளர்ந்த இல்லம், லொரேத்தோ திருத்தலத்தில் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டுவருவதை தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் ஸ்தெல்லா அவர்கள், நாம் வாழும் இல்லங்கள், நம்மை நல்வழி நடத்திச்செல்லும் பள்ளிகளாக, புனிதத்தலங்களாக மாற வாய்ப்புண்டு என்பதை, அன்னை மரியா வாழ்ந்த இல்லம் நமக்குச் சொல்லித்தருகிறது என்று கூறினார்.

இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் நடுவே, நம் இல்லங்கள், இந்தப் பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காக்கும் ஒரு புகலிடமாக அமையக்கூடும், அல்லது, நம் இல்லங்களிலேயே பிரச்சனைகள் எழுந்தால், அது, நமக்கு ஒரு சிறையாக மாறக்கூடும் என்ற முரண்பாடுகளைக் குறிப்பிட்ட கர்தினால் ஸ்தெல்லா அவர்கள், இத்திருத்தலத்தில் கூடியுள்ள நாம், நம் இல்லங்களை, புனிதம் வளரும் இடமாக மாற்ற, அன்னை மரியாவின் உதவியைத் தேடுவோம் என்று அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2021, 13:53