தேடுதல்

Vatican News
கர்தினால் Gregorio Rosa Chávez கர்தினால் Gregorio Rosa Chávez   (AFP or licensors)

சனநாயகம் என்பது, தீவிரசிகிச்சையில் பராமரிக்கப்படவேண்டியது

தாய் நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய ஒரு காலக்கட்டத்தில் கவலையோடு இருக்கிறோம் – எல் சால்வதோர் கர்தினால் ரோசா சாவேஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில், சனநாயகம் என்பது, ஒரு நோயாளியை இறுதிக்கட்ட சிகிச்சைக்கு உட்படுத்தி பராமரிப்பது போன்று காக்கப்படவேண்டியதாகும் என்று, அந்நாட்டு கர்தினால் Gregorio Rosa Chávez அவர்கள் கூறியுள்ளார்.

எல் சால்வதோர் நாட்டின் இப்போதைய அரசுத்தலைவர் Nayib Armando Bukele Ortez அவர்கள், 2024ம் ஆண்டில், மீண்டும் அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று, கடந்த வாரத்தில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, செப்டம்பர் 05, இஞ்ஞாயிறன்று செய்தியாளர்களிடம் இவ்வாறு தன் கருத்தை வெளியிட்டார், கர்தினால் Rosa Chávez.

எல் சால்வதோர் அரசு, தனது நடத்தையை மாற்றிக்கொள்ளும் என்பதில் தான் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறிய கர்தினால் Rosa Chávez அவர்கள், அந்நாடு, சனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு, உலகளாவிய சமுதாயம் உதவும் என்ற தன் எதிர்பார்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

எல் சால்வதோர் நாடு, தன் 200வது தேசிய விடுதலை நாளைக் கொண்டாடியவேளையில், அரசியலமைப்பிற்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்த கர்தினால் ரோசா சாவேஸ் அவர்கள், தாய் நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய ஒரு காலக்கட்டத்தில், கவலையோடு இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். (Fides)

07 September 2021, 15:36