தேடுதல்

கர்தினால் Gérald Cyprien Lacroix கர்தினால் Gérald Cyprien Lacroix  

திருநற்கருணை மாநாடு, மனித சமுதாயம் கூடும் நிகழ்வு

பெருந்தொற்று காலத்தில், விசுவாசிகள், தங்கள் நாடி நரம்புகளில், நம்பிக்கையை வேரூன்றச் செய்வதற்கு, திருநற்கருணை மாநாடு உதவும் - கர்தினால் Lacroix

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

52வது உலக திருநற்கருணை மாநாடு, நம் ஆண்டவர் இயேசு, வாழ்வின் ஊற்று என்பதை, அம்மாநாட்டில் பங்குபெறும் அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றது என்று, கனடா நாட்டு கியுபெக் பேராயரான, கர்தினால் Gérald Cyprien Lacroix அவர்கள், இம்மாநாடு பற்றி வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பல்வேறு மொழிகள், மற்றும், கலாச்சார மரபுகளுடன் நடைபெறும் இறைவேண்டல், தியானம், தனிசெபம், பலநாடுகளின் மக்கள் சந்திப்பு போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திருஅவையை, ஒரு புதிய கோணத்தில் காண, விசுவாசிகளுக்கு உதவிசெய்யும் என்றும், கர்தினால் Lacroix அவர்கள் எடுத்துரைத்தார்.

புடாபெஸ்ட் நகரில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள விசுவாசிகளுக்கு, இம்மாநாட்டின் நிகழ்வுகள், வாழ்வனைத்தும் இயேசுவிடமிருந்தே வருகின்றன என்பதையும், அவரே வாழ்வின் ஊற்று என்பதையும் கண்டுகொள்ள உதவும் என்றும், கர்தினால் Lacroix அவர்கள் எடுத்துரைத்தார்.

மனித சமுதாயத்தின் சந்திப்பு

இந்த மாநாடு, மனித சமுதாயத்தின் ஒரு சந்திப்பு என்றுரைத்த கர்தினால் Lacroix அவர்கள், பிறரன்பிலும், ஒற்றுமையிலும் ஒரு குடும்பமாக, உலகைக் கட்டியெழுப்ப, இம்மாநாட்டின் வழியாக இயேசு அனைவருக்கும் உதவுகிறார் என்றும் கூறினார்.

“திருநற்கருணை, அமைதி மற்றும், ஒப்புரவின் வற்றாத ஊற்று” என்ற தலைப்பில், இம்மாநாட்டில் உரையாற்றுகின்ற கர்தினால் Lacroix அவர்கள், திருநற்கருணை, தனது தனிப்பட்ட வாழ்வில், அமைதி மற்றும், ஒப்புரவின் வற்றாத ஊற்றாக எவ்வாறு இருக்கிறது எனவும், இறைவார்த்தையைப் பகிர்ந்துகொள்வதன் வழியாக, புதியதொரு சக்தியைத் தான் பெறுவதாகவும் கூறினார்.

உலக அளவில் பெருந்தொற்று பாதிப்பு, மற்றும், பல நாடுகளில் போர் ஆகியவை இடம்பெறும் ஒரு சூழலில் இந்த உலக திருநற்கருணை மாநாடு நடைபெறுவது, மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றுரைத்த கர்தினால் Lacroix அவர்கள், இத்துயரக் காலத்தில், விசுவாசிகள், தங்கள் நாடி நரம்புகளில், நம்பிக்கையை வேரூன்றச் செய்வதற்கு, இம்மாநாடு உதவும் என்ற தன் நம்பிக்கையை எடுத்துரைத்தார்.

இம்மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகள், புடாபெஸ்ட் நகரின் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவை விசுவாசிகளுக்கு வியப்பூட்டும் நிகழ்வுகளாக அமையும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். இந்த 52வது உலக திருநற்கருணை மாநாட்டில், ஈராக் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களும் உரையாற்றுகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2021, 15:12