தேடுதல்

எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர், கர்தினால் எர்டோ எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர், கர்தினால் எர்டோ 

திருநற்கருணை மாநாடு, நம்பிக்கையின் அடையாளம்

“எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது” (தி.பா.87,7) என்ற தலைப்பில், 52வது உலக திருநற்கருணை மாநாடு புடாபெஸ்ட்டில், செப்டம்பர் 05, இஞ்ஞாயிறன்று துவங்குகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில், செப்டம்பர் 05, இஞ்ஞாயிறு முதல், 12, ஞாயிறு வரை நடைபெறவிருக்கும் 52வது உலக திருநற்கருணை மாநாடு பற்றியும், அம்மாநாட்டின் நிறைவு நிகழ்வுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்குகொள்ள இருப்பது பற்றியும், எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர், கர்தினால் எர்டோ (Péter Erdő) அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் எடுத்துரைத்தார்.   

திருநற்கருணை மாநாடு, நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது என்றுரைத்த,  கர்தினால் எர்டோ அவர்கள், 2020ம் ஆண்டில் நடைபெறுவதாய் அறிவிக்கப்பட்ட 52வது உலக திருநற்கருணை மாநாடு, பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால், இவ்வாண்டில் நடைபெறுகின்றது எனக் கூறினார்.

எண்ணற்ற கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என நடைபெறும் இம்மாநாடு, உலக கிறிஸ்தவ சபைகள் அனைத்தின் ஒன்றிப்புக்காகச் செபிப்பதற்கு நல்லகொரு வாய்ப்பாகவும், கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வாகவும் இருக்கும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புடாபெஸ்ட்க்கு வருகை தருவது, ஓராண்டிற்கு மேலாக பெருந்தொற்றின் எதிர்விளைவுகளில் வாழும் மக்கள் மறுபிறப்பெடுப்பதன் அடையாளமாக உள்ளது எனவும், கர்தினால் எர்டோ அவர்கள் கூறினார்.

இம்மாதம் 12ம் தேதி, ஞாயிறன்று, புடாபெஸ்ட் நகருக்குச் செல்லும் திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள், 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவு திருப்பலியை, புடாபெஸ்ட் நகரின் தியாகிகள் வளாகத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னதாக, அந்நாட்டின் அரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசுவார் எனவும், கர்தினால் எர்டோ அவர்கள் கூறினார்.

52வது உலக திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலியில், யூதமதப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்றும், இம்மாநாடு, ஐரோப்பாவின் கிறிஸ்தவ வேர்கள், மற்றும், கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே பழங்காலத்தில் நிலவிய ஒன்றிப்பு ஆகியவற்றை நினைவுக்குக்கொணர்வதாக இருக்கும் என்றும், கர்தினால் எர்டோ அவர்கள் கூறினார்.

“எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது” (தி.பா.87,7) என்ற தலைப்பில், 52வது உலக திருநற்கருணை மாநாடு, செப்டம்பர் 05, இஞ்ஞாயிறன்று துவங்குகிறது. இதற்குமுன், 1938ம் ஆண்டு, மே மாதம் 25 முதல் 30 வரை, 34வது உலக திருநற்கருணை மாநாடு புடாபெஸ்ட்டில் நடைபெற்றது.

முதல் உலக திருநற்கருணை மாநாடு, 1881ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Lille நகரிலும், 38வது உலக திருநற்கருணை மாநாடு, 1964ம் ஆண்டு நவம்பர் 12 முதல் 15 வரை, பம்பாயிலும் நடைபெற்றன. இம்மாநாடு, அண்மை ஆண்டுகளில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

04 September 2021, 13:41