தேடுதல்

இந்தியாவில் கிறிஸ்தவம் இந்தியாவில் கிறிஸ்தவம் 

கர்நாடகாவில் மனமாற்றச் சட்டத்திற்கு ஆயர்கள் எதிர்ப்பு

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் தேவையற்ற பதட்டநிலைகளையும், சமுதாயங்களுக்கிடையே உறவுப்பிரச்சனைகளையும் உருவாக்கும் - பெங்களூரு பேராயர் மச்சாடோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், கட்டாய மதமாற்றங்களைத் தடைசெய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டவரைவு தொகுப்பு குறித்த தங்கள் கவலையை, அம்மாநில முதலமைச்சர் Basavaraj Bommai அவர்களிடம் எடுத்துரைத்துள்ளனர், கத்தோலிக்க ஆயர்கள்.

செப்டம்பர் 22, இப்புதன்கிழமையன்று, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் தலைமையில், கர்நாடகா முதலமைச்சர் Bommai அவர்களைச் சந்தித்த அம்மாநிலத்தின் பத்து ஆயர்கள், கிறிஸ்தவர்களின் வாழ்வைப் பாதிக்கின்ற பல்வேறு விவகாரங்கள் குறித்த மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர்.

கட்டாய மதமாற்றங்கள் பற்றிய சட்டவரைவுத் தொகுப்பு, அச்சத்தை உருவாக்கியுள்ளது என்றும், இது தீமை விளைவிக்கக்கூடியது, மற்றும், பயனற்றது என்றும் உரைத்த பேராயர் மச்சாடோ அவர்கள், இந்த வரைவுத்தொகுப்பு குறித்து கத்தோலிக்கத் திருஅவை கவலையடைந்துள்ளது என்று கூறினார்.

கர்நாடகா மாநிலமெங்கும், பள்ளிகள், கல்லூரிகள், மற்றும், மருத்துவமனைகளை நடத்திவருகின்ற கிறிஸ்தவ சமுதாயம், எந்த ஒரு மாணவரையோ அல்லது ஒரு நோயாளியையோ கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுங்கள் என்று ஒருபோதும் ஆலோசனை கூறியதில்லை என்று கூறிய பேராயர் மச்சாடோ அவர்கள், பரிந்துரைக்கப்பட்டுள்ள மதமாற்ற தடைச்சட்டம், கிறிஸ்தவத்தின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

கிறிஸ்தவர்களாகிய நாங்கள், யாரையும் மதம்மாற கட்டாயப்படுத்துவதில்லை எனவும், கட்டாய மதமாற்றங்களைத் தூண்டமாட்டோம் என்பதற்கு உறுதி கூறுகிறோம் எனவும் கூறியுள்ள பெங்களூரு பேராயர் மச்சாடோ அவர்கள், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் தேவையற்ற பதட்டநிலைகளையும், சமுதாயங்களுக்கிடையே உறவுப் பிரச்சனைகளையும் உருவாக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், பிஜேபி கட்சியால் ஆளப்பட்டு வருகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2021, 15:02