52வது திருநற்கருணை மாநாட்டைக் குறித்து ஆயர் András Veres
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஹங்கேரி நாட்டில் தற்போது நிகழ்ந்துவரும் அகில உலக திருநற்கருணை மாநாடு, ஐரோப்பாவிற்கும், இவ்வுலகிற்கும் தற்போது அதிகம் தேவையாக இருக்கும் அமைதியையும், ஒப்புரவையும் கொணரும் என்று தான் நம்புவதாக, ஹங்கேரி நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் András Veres அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் பூடபெஸ்ட்டில், செப்டம்பர் 5ம் தேதி முதல் நடைபெற்றுவரும் 52வது அகில உலக திருநற்கருணை மாநாட்டின் முக்கிய அம்சங்கள் குறித்தும், செப்டம்பர் 12, வருகிற ஞாயிறு, பூடபெஸ்ட் நகருக்கு வருகைதரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னம் குறித்தும், ஆயர் Veres அவர்கள், செப்டம்பர் 8, இப்புதனன்று, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ள ஹங்கேரி நாடு, மேற்கத்திய திருஅவையும், ஆர்த்தடாக்ஸ் திருஅவையும் சந்திக்கும் இடமாக அமைந்துள்ளது என்பதை, தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்ட ஆயர் Veres அவர்கள், தற்போது, பூடபெஸ்ட் நகருக்கு வருகை தந்துள்ள மத்திய கிழக்குப் பகுதியின் ஆயர்கள் பலர், அப்பகுதியினர் அடைந்துவரும் பேரிடர்களை வெளிச்சமிட்டு காட்டிவருகின்றனர் என்று கூறினார்.
மேலும், இந்த திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ள, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற நான்கு திசைகளிலிருந்தும், அமேரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா என்ற அனைத்து கண்டங்களிலிருந்தும் ஆயர்கள் கூடியிருப்பது, கத்தோலிக்கத் திருஅவையின் ஒன்றிப்பை இவ்வுலகிற்கு பறைசாற்றிவருகிறது என்று, ஆயர் Veres அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஹங்கேரி நாட்டைக் குறித்து அண்மைய காலங்களில் எதிர்மறையான கருத்துக்கள் ஊடகங்களால் பரப்பப்பட்டு வருவதைக் குறித்து தன் வருத்தத்தைத் தெரிவித்த ஆயர் Veres அவர்கள், தற்போது நடைபெற்றுவரும் திருநற்கருணை மாநாடும், திருத்தந்தையின் வருகையும் இந்நாட்டைக் குறித்து பரவியுள்ள தவறான எண்ணங்களை நீக்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
1881ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் Lille நகரில், முதல் திருநற்கருணை மாநாடு நடத்தப்பட்டது. 1938ம் ஆண்டு, பூடபெஸ்ட் நகரில், நடத்தப்பட்ட 34வது திருநற்கருணை மாநாட்டிற்குப் பின், அந்நகரில் மீண்டும் ஒருமுறை, 52வது அகில உலக திருநற்கருணை மாநாடு நடைபெற்று வருகிறது.