தேடுதல்

நீதி தேவதையின் சிலை நீதி தேவதையின் சிலை 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 4

உலகெங்கும், நீதிமன்றங்களில், எல்லா நேரங்களிலும், நடுநிலையான தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதும் நமக்குத் தெரிந்த உண்மைதான்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 4

இந்தியாவில், இவ்வாண்டு ஜூன் மாதம் வரை, 4 கோடியே 50 இலட்சத்திற்கும் மேலான வழக்குகள், நீதி மன்றங்களில், தீர்க்கப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன என்று, உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி, NV Ramana அவர்கள் கூறியுள்ளார். இந்தியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், இவ்வாண்டு ஜூலை மாதம் நடத்திய ஒரு கூட்டத்தில், தலைமை நீதிபதி Ramana அவர்கள், இந்தக் கூற்றை பதிவுசெய்தார்.

இதற்கு முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி Markandey Katju அவர்கள், 2019ம் ஆண்டு, ஊடகத்திற்கு வழங்கிய ஒரு பேட்டியில், அன்றைய நிலையில், இந்தியாவில் 3 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்படாமல் இருந்தன என்று, கூறியிருந்தார். இவ்விரு தகவல்களையும் இணைத்துப் பார்க்கும்போது, 2019க்கும், 2021க்கும் இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், ஒரு கோடிக்கும் அதிகமான வழக்குகள், இந்தியாவின் நீதிமன்றங்களில் பதிவாகி, தீர்க்கப்படாமல் தேங்கியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கோவிட்-19 பெருந்தொற்று, மக்களை வேறு பல துறைகளில் பெருமளவில் முடக்கிப்போட்டிருந்தாலும், குற்றங்கள் என்ற துறைமட்டும், வழக்கம்போல், அல்லது, வழக்கத்திற்கும் அதிகமாக, முழுவீச்சில் செயல்பட்டது என்பது, வேதனை தரும் உண்மை. அத்துடன், இந்த பெருந்தொற்றை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, இந்திய நடுவண் அரசின் பெருந்தலைவர்கள், தங்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் மீது, பொய்யான வழக்குகளைத் தொடுத்து, அவர்களை, சிறையில் அடைத்துள்ளதையடுத்து, தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் கூடியுள்ளது. 2019ம் ஆண்டு, ஊடகத்தில் தன் கருத்தைப் பதிவுசெய்த முன்னாள் நீதிபதி Katju அவர்கள், "இந்தியாவில், இன்று முதல், எந்த ஒரு புதிய வழக்கும் பதிவாகாமல், பழைய வழக்குகளை மட்டும் தீர்க்க ஆரம்பித்தால், அவற்றை நடத்தி முடிப்பதற்கு, 360 ஆண்டுகள் ஆகும்" என்ற ஒரு கணிப்பை வெளியிட்டார்.

இந்தியாவில், பல்லாயிரம் வழக்குகளில், நீதிவேண்டி, வழக்கு தொடுத்தவர்கள் இறந்து, பல ஆண்டுகள் சென்றபின், அவ்வழக்கின் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேதனைதரும் இவ்வரலாற்றின் ஒரு பக்கமாக, அண்மையில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் வழக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

மனசாட்சி ஏதுமற்ற இந்திய நடுவண் அரசின் தலைவர்களும், அவர்கள் செய்யும் குற்றங்களுக்குத் துணைபோகும் NIA எனப்படும் தேசியப் புலனாய்வு துறையைச் சார்ந்தவர்களும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், வன்முறையைத் தூண்டி, நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தவர் என்றும், தீவிரவாதக் குழுவுடன் தொடர்பு கொண்டவர் என்றும் பொய்யான குற்றங்களைச் சுமத்தி, அவரைச் சிறையில் அடைத்து, கொலைசெய்தனர். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பொய் என்று நிரூபித்து, அவரது பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்குவதற்கு, அவரது மரணத்திற்குப்பின், வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முன்னாள் நீதிபதி Katju அவர்களின் கணிப்புப்படி, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சார்பில் இந்திய இயேசு சபையினர் தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்பு, 360 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, 2,381ம் ஆண்டுக்குப்பின் வெளியாக வாய்ப்பு உண்டு.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும், நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் குவிந்திருக்கும். அவை தீர்க்கப்படுவதற்கு, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும். அத்துடன், உலகெங்கும், நீதிமன்றங்களில், எல்லா நேரங்களிலும், நடுநிலையான தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதும் நமக்குத் தெரிந்த உண்மைதான். இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலான தீர்ப்புகள், செல்வமும், அதிகாரமும் உடையவர்கள் சார்பில் வழங்கப்படுவதையும் நாம் அறிவோம்.

அதிகாரமோ, செல்வமோ இல்லாத ஒரு சாதாரண குடிமகன், வலிமை அனைத்தும் மிக்க அரசியல் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கின் முடிவு, பெரும்பாலும், அத்தலைவர்களின் சார்பாகவே வழங்கப்பட்டு வருகிறது என்பதை, நீதிமன்றங்களின் பதிவேடுகள் நமக்கு மீண்டும், மீண்டும் உணர்த்திவருகின்றன. அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கும் வழக்கு, இந்திய நடுவண் அரசுக்கு களங்கத்தை உருவாக்கிவரும் தலைவர்களுக்கு எதிரானது என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பு வெளிவருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதையும், இந்தத் தீர்ப்பு யார் பக்கம் சாய்ந்திருக்கும் என்பதையும் நம்மால் எளிதில் ஊகிக்கமுடியும்.

எனவேதான், இந்த வழக்கிலிருந்து அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை, ஆண்டவர் விடுவித்து, அவருக்குத் தேவையான ஓய்வையும், அமைதியையும், தன் விண்ணக இல்லத்தில் தற்போது அளித்துள்ளார் என்று எண்ணி, நாம் நிம்மதியடைகிறோம்.

அதிகார வர்க்கத்தினருக்கு எதிராகப் போராடிய அருள்பணி ஸ்டான் சுவாமி போலவே, திருப்பாடல்களின் ஆசிரியர்களில் ஒருவரான தாவீது, அதிகாரம் அனைத்தும் கொண்ட அரசர் சவுலுக்கு எதிராகப் போராடிவந்தார். அந்த வழக்கை, அவர், ஆண்டவரிடம் கொணர்ந்துள்ளார், 17ம் திருப்பாடல் வழியே.

இத்திருப்பாடலில் பதிவாகியுள்ள 15 இறைவாக்கியங்களை, மூன்று பகுதிகளாகச் சிந்தித்துப்பார்க்கலாம். 1 முதல் 9 முடிய உள்ள முதல் பகுதியில், தாவீது, தான் குற்றமற்றவர் என்பதை, பல வழிகளில், ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, தன்னை இறைவன் காத்தருளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைக்கிறார்.

அடுத்து, 10 முதல் 12 முடிய உள்ள மூன்று இறைவாக்கியங்களில், தன்னைச் சூழ்ந்திருக்கும் பொல்லாரைப்பற்றியும், அவர்கள் தன்னை அழிப்பதற்காகக் கொண்டிருக்கும் வெறியைப்பற்றியும் கூறியுள்ளார்.

13 முதல் 15 முடிய உள்ள இறுதி மூன்று இறைவாக்கியங்களில், மீண்டும் ஒருமுறை இறைவனின் உதவியைத் தேடி, இறைவனின் 'உருவம் கண்டு நிறைவு பெறுவேன்' என்ற நம்பிக்கை நிறைந்த அறிக்கையுடன், இத்திருப்பாடலை நிறைவு செய்கிறார் தாவீது.

17ம் திருப்பாடலின் ஆரம்ப வரிகளில், “ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக்கேளும்” என்று தாவீது எழுப்பும் வேண்டுதலை, சென்ற விவிலியத்தேடலில் நாம் சிந்தித்தோம். இந்த ஆரம்ப வரிகளைத் தொடர்ந்து, “உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்” (திருப்பாடல் 17:2) என்று தாவீது பதிவு செய்துள்ள கூற்றை, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள், சவுலுக்கும், தாவீதுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களுடன் இணைத்து விளக்கமளித்துள்ளனர்.

கொலைவெறியோடு தன்னைத் துரத்திவந்த சவுலைக் கொலவதற்கு தனக்கு வாய்ப்புகள் கிடைத்தபோதும், நீதியை தனக்கேற்றவாறு வளைத்துக்கொள்ளாமல், ஆண்டவரே நீதி வழங்கட்டும் என்று தாவீது காத்திருந்தது, அந்த மோதல்களில் வெளிப்படுகிறது. சாமுவேல் முதல் நூல், 24, மற்றும் 26 ஆகிய இரு பிரிவுகளில், (காண்க. 1 சாமுவேல் 24:1-15; 26:1-25) தாவீது எவ்வாறு, சவுலின் உயிரைப் பறிக்காமல் நடந்துகொண்டார் என்பது, இரு நிகழ்வுகள் வழியே கூறப்பட்டுள்ளது. இவ்விரு தருணங்களிலும், சவுலின் உயிரை எளிதில் பறிப்பதற்கு தாவீதுக்கு வாய்ப்புகள் வந்தபோதும், தாவீதின் நண்பர்கள், இது, ஆண்டவராகவே தாவீதுக்கு தந்துள்ள வாய்ப்பு என்று அவரைத் தூண்டியபோதும், தாவீது, தன் நீதி ஆண்டவரிடமிருந்து வரட்டும் என்று கூறி, சவுலை கொல்லாமல் விட்டுவிடுகிறார். இவ்விரு தருணங்களிலும், தாவீது, மன்னர் சவுலிடம் கூறும் கூற்றுகள், ஆண்டவர் தனக்கு நீதி வழங்கவேண்டும் என்பதில், அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

தாவீது 'சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார்'. (1 சாமு. 24:4)
தாவீது 'சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார்'. (1 சாமு. 24:4)

முதல் முறை சவுலைக் கொல்வதற்கு தாவீதுக்கு வாய்ப்பு வந்தபோது, தாவீது 'சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார்'. (1 சாமு. 24:4) அதைத் தொடர்ந்து, அவர் சவுலிடம் பேசும்போது, "என் தந்தையே பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை... ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எமக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி, உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!" என்றார். (1 சாமு. 24:11,15)

அதேவண்ணம், இரண்டாம் முறையும், சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டபின் (1 சாமு. 26:12) அவரைக் கொல்லாமல் விட்டுவிடும் தாவீது, அவரிடம், "இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை எல்லா இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக!" என்றார். (1 சாமு. 26:24)

தாவீது, சவுலைக் கொல்லாமல் விட்டதன் காரணத்தை, தன் நண்பர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்: "ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக்கூடாது" (1 சாமு. 24:6). இதே காரணத்தை, தாவீது, அபிசாயிடம் கூறி, இரண்டாம் முறையும் சவுலைக் கொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை, ஆண்டவர் விரும்பினால் அவரே கொல்லட்டும் (காண்க. 1 சாமு. 26:9-11) என்று தாவீது தெளிவாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு, தன் எதிரியை வீழ்த்துவதற்குச் சாதகமான வாய்ப்புகள் தனக்குக் கிடைத்தபோதும், ஆண்டவரின் நீதியைத் தேடிக்காத்திருந்த தாவீது, நீதியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும், அல்லது, நீதியை விலைகொடுத்து வாங்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமைகிறார். “உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்” (திபா 17:2) என்று தாவீது கூறியுள்ள கூற்று, அரசியல் தலைவர்களின் மனசாட்சியின் குரலாக, ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இந்த கூற்றைத் தொடர்ந்து, 17ம் திருப்பாடலின் முதல் பகுதியில், இறைவன் தன்னை எவ்வாறெல்லாம் காப்பார் என்பதை விவரிக்கும்போது, “உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்” (திபா 17:8) என்று தாவீது பயன்படுத்தியுள்ள அழகிய இரு உருவகங்களை மையப்படுத்தி, நம் தேடல் பயணம் அடுத்தவாரம் தொடரும்.

07 September 2021, 14:19