தேடுதல்

பங்களாதேஷ் முன்னாள் பேராயர் கங்குலி அவர்கள் பிறப்பின் நூறாவது ஆண்டில், கர்தினால் ரொசாரியோ பங்களாதேஷ் முன்னாள் பேராயர் கங்குலி அவர்கள் பிறப்பின் நூறாவது ஆண்டில், கர்தினால் ரொசாரியோ 

பங்களாதேஷ் நாடு தன் முதல் புனிதருக்காக காத்திருக்கிறது

பங்களாதேஷை தாயகமாகக் கொண்ட முதல் பேராயர் கங்குலி அவர்கள், 2006ம் ஆண்டிலேயே இறையடியாராக அறிவிக்கப்பட்டு, அவரைப் புனிதராக அறிவிப்பதற்குரிய முயற்சிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பேராயர் Theotonius Amal Ganguly அவர்கள் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு அந்நாட்டு கத்தோலிக்கர்கள் அனைவரும் செபிப்பதுடன், முன்னாள் பேராயரின் பணிகள் மற்றும் வாழ்வு குறித்து மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் டாக்கா பேராயர் Bejoy D’Cruze.

பங்களாதேஷ் திருஅவையில் கத்தோலிக்கர்களால் புனிதராக மதிக்கப்படும் முன்னாள் பேராயர் கங்குலி அவர்கள், புனிதராக அறிவிக்கப்பட்டால், பங்களாதேஷ் நாடு, தன் முதல் புனிதரைக் கொண்டிருக்கும் என்று கூறிய பேராயர் D’Cruze அவர்கள், இஸ்லாமியர்களை, பெரும்பான்மையினராகக் கொண்ட பங்களாதேஷில், சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள் குறித்த மதிப்பு, இதனால் உயரும் என எடுத்துரைத்தார்.

பங்களாதேஷை தாயகமாகக் கொண்ட முதல் பேராயர் கங்குலி அவர்கள், 2006ம் ஆண்டிலேயே இறையடியாராக அறிவிக்கப்பட்டு, அவரைப் புனிதராக அறிவிப்பதற்குரிய முயற்சிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இறையடியார் கங்குலி குறித்த விவரங்களும், பங்களாதேஷ் திருஅவையின் புனிதர் பட்ட படிநிலைகளுக்கான ஆரம்ப கட்ட பணிகளும் ஏற்கனவே 2018ம் ஆண்டு வத்திக்கானில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார், இப்படிநிலைகளை கவனித்துவரும் பங்களாதேஷ் அருள்பணி Patrick Simon Gomes.

1920ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பங்களாதேஷில் பிறந்த பேராயர் இறையடியார் கங்குலி அவர்கள், 1946ல் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, 1960ம் ஆண்டு டாக்காவின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 1967ம் ஆண்டு டாக்காவின் பேராயராக நியமிக்கப்பட்ட இறையடியார் கங்குலி, 1977ம் ஆண்டு தன் 57ம் வயதில் மாரடைப்பால் இறைபதம் சேர்ந்தார்.

தாழ்மையுணர்வுக்கு பெயர் பெற்றவராக இருந்த பேராயர் கங்குலி, ஏழைகள் மீது மிகுந்த அன்புகொண்டவராக தன் பணிகளை ஆற்றினார். (UCAN)

06 September 2021, 15:26