தேடுதல்

டிஜிட்டல் உலகில் சிறார் டிஜிட்டல் உலகில் சிறார் 

மகிழ்வின் மந்திரம்: பிள்ளைகள் சுயமதிப்பில் வளர குடும்பம்

சில காரியங்களை, சரியான நேரம் வரும்வரை தள்ளிவைப்பதற்கு நாம் கற்றுக்கொள்ளும்போது, நம் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தவும், அவற்றின் மீது பற்றின்றி இருக்கவும் கற்றுக்கொள்கிறோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

பிள்ளைகளின் முதல் கல்விக்கூடம் குடும்பம், குடும்ப வாழ்க்கை, அறநெறிக் கல்வியை கற்றுக்கொடுக்கும் ஓர் அமைப்பு போன்ற பொருளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 274ம் பத்தி முதல், 279ம் பத்திவரை தன் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். 275ம் பத்தியில் திருத்தந்தை பதிவுசெய்துள்ள சிந்தனைகளின் சுருக்கம் இதோ...

தொழில்நுட்பம் வேகமாக முன்னேறிவருகின்ற இக்காலத்தில், மக்களும் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய ஒரு சூழலில், குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளுக்கு, நம்பிக்கையூட்டும் முறையில் நன்னெறிக் கல்வியை வழங்குவது மிகவும் முக்கியம். இக்காலத்தில், பிள்ளைகள், மின்னணுக் கருவிகளோடு அதிகநேரம் விளையாடுகின்றனர். இந்நிலையில், அவர்கள், தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்ற சிந்தனைகளைத் தவிர்க்கவும், தங்களின் சிறந்த திறமைகளைக் கண்டுபிடித்து வளர்த்துக்கொள்ளும் வழிகளைக் காணவும் அவர்களுக்கு உதவ வேண்டும். பொதுவாக, ஆசைகளைத் தள்ளிப்போடுவது என்பது, அவற்றை நிராகரிப்பது என்ற அர்த்தமல்ல, ஆனால், அவற்றை நிறைவேற்றும் காலத்தை தள்ளிவைப்பதாகும். சில காரியங்களை நிறைவேற்றுவதற்கு காத்திருக்கவேண்டும் என்று, சிறாரும், வளர்இளம்பருவத்தினரும் உணர்வதற்கு உதவிசெய்யப்படவில்லையெனில், அவர்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தீவிரம் காட்டுபவர்களாகவும், எனக்கு இப்போதே அனைத்தும் வேண்டும் என்ற தீமையை வளர்த்துக் கொள்பவர்களாகவும் மாறுவார்கள். சில காரியங்களை, சரியான நேரம் வரும்வரை தள்ளி வைப்பதற்கு நாம் கற்றுக்கொள்ளும்போது, நம் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தவும், அவற்றின் மீது பற்றின்றி இருக்கவும் கற்றுக்கொள்கிறோம். பிள்ளைகள், தங்களுக்குத் தாங்களே பொறுப்பு என்பதை உணரும்போது, அவர்களின் சுயமதிப்பு வளப்படுத்தப்படுகிறது. இது, மற்றவரின் சுதந்திரத்தை மதிக்கவும், அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. இது அவர்கள் வயதுவந்தவர்களைப்போல் செயல்படவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்றோ, அல்லது, பொறுப்புள்ள சுதந்திரத்தில் வளரும் அவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடுவதோ என்ற அர்த்தமல்ல. நல்லதொரு குடும்பத்தில், இத்தகைய கற்றல்முறை நடைபெறுகிறது.  (அன்பின் மகிழ்வு 275)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2021, 14:51