தேடுதல்

ஆப்கானிலிருந்து திரும்பிய அமெரிக்க படைவீரரின் குடும்ப சந்திப்பு ஆப்கானிலிருந்து திரும்பிய அமெரிக்க படைவீரரின் குடும்ப சந்திப்பு 

மகிழ்வின் மந்திரம்: விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கும் முதல் பள்ளி

இக்காலத்தில் பல்வேறு ஊடகங்கள் அனுப்பும் சில செய்திகள் பற்றி விமர்சனப் பார்வையோடு நோக்குவதற்கு குடும்பத்தில் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

குழந்தைப் பருவத்தில் தாங்கள் கற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே பலர் வாழ முயற்சி செய்வதால், குடும்பங்களில், பிள்ளைகள் வளர்ப்பில் எத்தகைய நன்னெறி வாழ்வுமுறை கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில் விளக்கி வருகிறார். நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்கும் முதல் கல்விக்கூடம் குடும்பம் என்று துவங்கியுள்ள 274ம் பத்தியில் திருத்தந்தை  கூறியுள்ள கருத்துக்கள் இதோ...

மனித விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கும் முதல் பள்ளிக்கூடம், குடும்பம். அங்கே நாம், சுதந்திரத்தை ஞானத்தோடு பயன்படுத்த கற்றுக்கொள்கிறோம். குழந்தைப் பருவத்தில் சில மனச்சார்புகள் நம்மில் வளர்கின்றன. அவை, வாழ்வு முழுவதும் நம்மில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. அந்தப் பதிவு, ஒரு குறிப்பிட்ட விழுமியத்தின் மீது ஈர்ப்பாகவோ அல்லது, செயல்படும் சில முறைகளில் இயல்பாகவே வெறுப்பைத் தூண்டுவதாகவோ உள்ளது. பலர், தங்களது வாழ்வின் துவக்ககாலங்களில் கற்றுக்கொண்டவையே சரியானவை என்பதன் அடிப்படையில், குறிப்பிட்ட வழியில் நடக்கின்றனர். அதுவே சரியெனவும் நினைக்கின்றனர். “இவ்வாறுதான் நான் கற்றுக்கொடுக்கப்பட்டேன்”, “இவ்வாறு செயல்படவே நான் கற்றுக்கொண்டேன்” என்று, அதற்குக் காரணமும் சொல்கின்றனர். எனவே, குடும்ப வாழ்வில் சரியான நெறிமுறைகள் பின்பற்றப்பட வழிகாட்டல் அவசியம். இக்காலத்தில், பல்வேறு ஊடகங்கள் அனுப்பும் சில செய்திகள் பற்றி விமர்சனப் பார்வையோடு நோக்குவதற்கும் குடும்பத்தில் நாம் கற்றுக்கொள்ளலாம். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது, விளம்பரங்கள் வழங்கப்படும் முறைகள், பலநேரங்களில் எதிர்மறை தாக்கங்களையே உருவாக்குகின்றன என்பதையும், அவை, குடும்ப வாழ்வில்  புகுத்தப்பட்ட விழுமியங்களைக் குறைக்கின்றன என்பதையும் வருத்தத்தோடு குறிப்பிடவேண்டியுள்ளது. (அன்பின் மகிழ்வு 274)

09 September 2021, 13:06