தேடுதல்

Vatican News
குழந்தைகளை வழிபாட்டுத் தலத்திற்கு அழைத்துச்செல்லும் பெற்றோர் குழந்தைகளை வழிபாட்டுத் தலத்திற்கு அழைத்துச்செல்லும் பெற்றோர்  (AFP or licensors)

மகிழ்வின் மந்திரம் : நன்னடத்தையில் உருபெறுதல்

நன்னெறி மதிப்பீடுகள், அவற்றிற்கு எதிராக, வயதுவந்தோரும், பெற்றோரும் வெளிப்படுத்தும் குறைபாடுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. எனவே, வளர் இளம் பருவத்தினருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

குழந்தைகளை நன்னெறியில் உருவாக்கும் வேளையில், தேவையான அளவு சுதந்திரமும், அதே வேளையில், கண்டிப்பு, கட்டுப்பாடு ஆகியவைகளும் இணைந்து செல்லவேண்டும் என்பதை, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்த பரிந்துரைகளைத் தொடர்ந்து, குழந்தை வளரும்போது உருவாகும் பல்வேறு எதார்த்தமானச் சூழல்களில், பெற்றோர் பொறுமையாக இருப்பது நல்லது என்பதை, 271 முதல் 273 முடிய உள்ள மூன்று பத்திகளில் குறிப்பிட்டுள்ளார். 271ம் பத்தியில், குழந்தைக்கு வழங்கப்படவேண்டிய நன்னெறி கல்வியின் நுணுக்கமான சில அம்சங்களைக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நன்னடத்தை உருவாக்கம்' எவ்வாறு அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை, 272ம் பத்தியில், இவ்வாறு கூறியுள்ளார்:

"நன்னடத்தை உருவாக்கம் (Ethical Formation) என்ற சொற்களைக் கேட்டதும், அவ்வப்போது, முகச்சுளிப்பு ஏற்படுகிறது. புறக்கணிப்பு, ஏமாற்றம், பாசத்தில் குறைபாடு மற்றும் நல்வழி காட்ட இயலாத பெற்றோர் ஆகியவை, இந்த முகச்சுளிப்பை ஏற்படுத்துகின்றன.

நன்னெறி மதிப்பீடுகள், அவற்றிற்கு எதிராக, வயதுவந்தோரும், பெற்றோரும் வெளிப்படுத்தும் குறைபாடுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. எனவே, வளர் இளம் பருவத்தினருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. நன்னெறி மதிப்பீடுகளுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டுகளாய் இருப்போரை மதித்து போற்றவும், அம்மதிப்பீடுகள், ஏனையோரிடம் வெவ்வேறு நிலையில் இருப்பதை புரிந்துகொள்ளவும், வளர் இளம் பருவத்தினருக்கு உதவிகள் செய்யவேண்டும்.

நன்னெறி மதிப்பீடுகளைப் பின்பற்றியதால், மோசமான அனுபவங்களை அடைந்துள்ள இளையோர், மீண்டும் அவற்றைப் பின்பற்ற தயக்கம்கொள்வர். அவர்கள் அடைந்த மோசமான அனுபவங்களால் உருவான ஆழ்மனக் காயங்களிலிருந்து அவர்களைக் குணமாக்கி, அடுத்தவரோடும், தங்கள் சமுதாயத்தோடும் அமைதியில் வாழும் திறனில் அவர்களை வளர்க்கவேண்டும்." (அன்பின் மகிழ்வு 272)

07 September 2021, 14:06