தேடுதல்

ஹெய்ட்டி சிறார் ஹெய்ட்டி சிறார் 

மகிழ்வின் மந்திரம்: நன்னெறிக் கல்வி வலியுறுத்துவது...

பிள்ளைகளுக்கு நன்னெறிக் கல்வி, அவர்கள் அதனை ஏற்கும் முறையில் வழங்கப்படவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

மனித வாழ்வுக்கேற்ற மகத்தான வாழ்வியல் நெறிகளை வாரி வழங்கியுள்ள, நம் தமிழ் மூதாட்டி ஒளவையார் அவர்கள், அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்று, கிடைத்தற்கரிய மனித வாழ்வின் மேன்மையை பதிவுசெய்துள்ளார். இந்த மனித வாழ்வு, சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ வேண்டுமெனில், அறம் சார்ந்த வாழ்வு மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு அடிப்படையாக அமைவது, கல்வியும், நன்னெறியுமே. இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், கல்வி, நன்னெறி சார்ந்தது என்பதை, பெற்றோர் பல நேரங்களில் மறந்துவிடுகின்றனர். இதனால், நன்னெறிகளைக் கற்றுக்கொடுப்பது தங்களின் கடமை என்பதை உணரும் ஆசிரியர்களுக்கும், இது கடினமான சூழலை உருவாக்குகின்றது. மாணவர்கள், நன்னெறியற்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் இது ஒருவகையில் காரணமாகின்றன. இச்சூழலில், பிள்ளைகளுக்கு, நன்னெறிக் கல்வியை கற்றுக்கொடுக்கும் முதல் ஆசான்கள் பெற்றோர் என்பதையும்,  பிள்ளைகள் தவறிழைக்கும்போது அவர்களை திருத்தும்முறைகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில் தன் கருத்துக்களைத் தெளிவாகக் கூறியுள்ளார். அம்மடலின் 271ம் பத்தியில் நன்னெறிக் கல்வி பற்றி திருத்தந்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நன்னெறிக் கல்வி, ஒரு குழந்தை, அல்லது, ஓர் இளைஞனிடம், தங்கள் வயதுக்கு மீறிய செயல்களில் தியாகங்களை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்பதில்லை. மாறாக, மனக்கசப்பு, அல்லது வற்புறுத்தலுக்கு வழிவகுக்காத, ஒரு முயற்சியை மட்டுமே, அவர்களிடம் அது வலியுறுத்துகிறது. சாதாரணமாக, புரிந்துகொள்ளக்கூடிய, ஏற்பதற்கு உகந்த, மற்றும், மதிப்பை உயர்த்தக்கூடிய சிறிய வழிமுறைகளைப் பரிந்துரைப்பதன் வழியாகவே அக்கல்வி வழங்கப்படுகிறது. அதேநேரம், இதில் தங்களால் செய்யக்கூடிய சிறிய தியாகங்களையும், அவர்களிடம், அக்கல்வி கேட்கிறது. மற்றபடி, மிக அதிகமாக வலியுறுத்துவதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. அவ்வாறு வலியுறுத்தப்படும் ஒரு குழந்தை, நம் அதிகாரத்திலிருந்து விடுபடும்போது, அது நன்மை செய்வதை நிறுத்திவிடக்கூடும்.

இவ்வாறு தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 271ம் பத்தியின் இறுதியில் எச்சரிக்கை விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிள்ளைகளுக்கு நன்னெறிக் கல்வியை, அவர்கள் அதனை ஏற்கும் முறையில் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2021, 15:09