தேடுதல்

வீட்டில் அண்டை வீட்டு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் உகாண்டா நாட்டு தாய் வீட்டில் அண்டை வீட்டு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் உகாண்டா நாட்டு தாய் 

மகிழ்வின் மந்திரம் - நன்னெறி என்பது, உறுதியான உள்மன நம்பிக்கை

நற்குணங்களின் சில வடிவங்களை சுதந்திரமாக, மதிப்புடன்கூடிய நிலையில் மீண்டும் மீண்டும் ஆற்றுவதன் வழியாக அன்றி, நன்னெறிக் கல்வி இடம்பெறுவதில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவில், குழந்தைகளின் நன்னெறி உருவாக்கம் என்ற உபதலைப்பின் கீழ் 5 பத்திகளில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பகுதியின் இறுதி இரு பத்திகளில், அதாவது, 266, 267ம் பத்திகளில் பதிவுசெய்துள்ள எண்ணங்களின் தொகுப்பு :

நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஒருவர் அன்புகூர்பவராகவும், மற்றவர்களிடம் வெளிப்படைத் தன்மையுடையவராகவும் இருக்கலாம், ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் "தயவுசெய்து", "நன்றி" மற்றும் "மன்னிக்கவும்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த அவருக்கு மூத்தவர்களால் பயிற்றுவிக்கப்படவில்லை என்றால், அவரது நல்ல உள்மனநிலை எளிதில் முன்னிலைப்படுத்தப்படாததாகிவிடும். நல் விருப்பத்தை வலுப்படுத்துதல், மற்றும், குறிப்பிட்ட சில செயல்களை மீண்டும் மீண்டும் ஆற்றுவது, நன்னெறி நடத்தையைக் கட்டியெழுப்புவதாகும். நற்குணங்களின் சில வடிவங்களை, சுதந்திரமாக, மதிப்புடன்கூடிய நிலையில் மீண்டும் மீண்டும் ஆற்றுவதன் வழியாக அன்றி, நன்னெறிக் கல்வி இடம்பெறுவதில்லை. சரியாக ஊக்கப்படுத்தப்பட்ட செயல்கள் இல்லாத வேளையில், ஒரு நற்பண்பை வளர்க்க, வெறும் ஆசை அல்லது, ஒரு குறிப்பிட்ட மதிப்புக்குரிய ஈர்ப்பு மட்டுமே போதாது.

சுதந்திரம் என்பது அற்புதமான ஒன்று. ஆனால், அது சிதறடிக்கப்பட்டு இழக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. நன்னெறி கல்வி என்பது, கருத்துப் பகிர்வுகள், ஊக்கங்கள், நடைமுறை பயன்பாடுகள், தூண்டுதல்கள், வெகுமதிகள், எடுத்துக்காட்டுகள், மாதிரிகள், அடையாளங்கள், ஆழ்ந்த சிந்தனைகள், ஊக்கம், உரையாடல், மற்றும் நம் விடயங்களை ஆற்றுவதில் ஒரு தொடர்ச்சியான மறுபரிசீலனை ஆகியவற்றிற்கான சுதந்திரத்தை வளர்ப்பதை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். இவை அனைத்தும் தன்னிச்சையாக நல்லது செய்ய வழிவகுக்கும் நிலையான உள்ளார்ந்த கொள்கைகளை உருவாக்க உதவும். நன்னெறி என்பது உறுதியான உள்மன செயல்பாட்டுக் கொள்கையாக மாறிய ஒரு திடநம்பிக்கை. இவ்வாறு, நன்னெறி வாழ்வு, சுதந்திரத்தை உருவாக்குகிறது, பலப்படுத்துகிறது, மற்றும் வடிவமைக்கிறது. இல்லையெனில், நாம் மனிதநேயமற்ற, மற்றும் சமூக விரோத மனநிலைகளுக்கு அடிமைகளாக மாறிவிடுவோம். நாம் முழு உணர்வு நிலையுடனும், சுதந்திரமாகவும், நமக்குள்ளிருந்து தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படுபவர்களாகச் செயல்படவேண்டும் என நம் மனித மாண்பு எதிர்பார்க்கிறது (அன்பின் மகிழ்வு 266,267)

01 September 2021, 14:32