தேடுதல்

செப்டம்பர் 5 முதல் 12 முடிய புடபெஸ்ட் நகரில் நடைபெறும் 52வது அகில உலக திருநற்கருணை மாநாடு செப்டம்பர் 5 முதல் 12 முடிய புடபெஸ்ட் நகரில் நடைபெறும் 52வது அகில உலக திருநற்கருணை மாநாடு 

52வது அகில உலக திருநற்கருணை மாநாடு துவங்கியது

கிறிஸ்து எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்பதையும், அவர் தன் திருஅவையையோ, மக்களையோ ஒருபோதும் விட்டுச்செல்வதில்லை என்பதையும், நாம் முழுமையாக உணர, இந்த திருநற்கருணை மாநாடு உதவி செய்வதாக - கர்தினால் பீட்டர் எர்டோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருநற்கருணையின் வழியே, கிறிஸ்து எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்பதையும், அவர் தன் திருஅவையையோ, மக்களையோ ஒருபோதும் விட்டுச்செல்வதில்லை என்பதையும், இந்நாள்களில் நாம் முழுமையாக உணர, இந்த திருநற்கருணை மாநாடு நமக்கு உதவி செய்வதாக என்று, ஹங்கேரி நாட்டு கர்தினால் பீட்டர் எர்டோ (Péter Erdő) அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 5, இஞ்ஞாயிறன்று, ஹங்கேரி நாட்டின் புடபெஸ்ட் நகரில், 52வது அகில உலக திருநற்கருணை மாநாடு துவங்கியவேளையில், இம்மாநாட்டின் ஆரம்பத் திருப்பலியின் துவக்க உரையில், கர்தினால் எர்டோ அவர்கள் உணர்வுப்பூர்வமான இந்தச் சொற்களை கூறி, இம்மாநாட்டைத் துவக்கிவைத்தார்.

கோவிட் பெருந்தொற்றின் காரணமாக இந்த திருநற்கருணை மாநாடு, ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் எர்டோ அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு சாட்சியம் வழங்கும்வண்ணம் இந்த துவக்கத் திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்த கீழைவழிபாட்டு முறை கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.

புடபெஸ்ட் நகரில் அமைந்துள்ள நாயகர்களின் சதுக்கம் என்று பொருள்படும் Heroes’ Square என்ற திறந்தவெளியரங்கில் நடைபெற்ற இந்த ஆரம்பத் திருப்பலியில், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ (Angelo Bagnasco) அவர்கள் தயாரித்து அனுப்பியிருந்த மறையுரையை, கர்தினால் எர்டோ அவர்கள், ஹங்கேரிய மொழியில் வாசித்தளித்தார்.

"அனைத்து ஊற்றுகளும் உம்மிலே உள்ளன" என்ற மையக்கருத்துடன் நடத்தப்படும் இந்த மாநாட்டின் மையமாக விளங்கும் திருநற்கருணை, நம்மை தனிமையிலிருந்து வெளியேற்றுவதோடு, நம்மிடையே உருவாகியுள்ள அனைத்து வேறுபாடுகளையும், தூரங்களையும் கடந்து செல்ல உதவுகிறது என்று கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்களின் மறையுரை சுட்டிக்காட்டியது.

உலகின் எந்த மூலையில் நாம் இருந்தாலும், கடவுள் நம்மை அன்புடன் கூர்ந்து நோக்குகிறார் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்டுள்ள கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், நாம் அனைவரும் கிறிஸ்துவின் இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள் என்பதால், நம்மில் யாரும் அனாதைகள் அல்ல என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மேலும், இத்திருப்பலியில், தங்கள் முதல் நற்கருணையையும், உறுதிப்பூசுதலையும் பெற்ற குழந்தைகளை தன் மறையுரை வழியே வாழ்த்திய கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், இறைவன் எப்போதுமே இளமையானவர் என்பதை, இக்குழந்தைகள் நமக்கு மீண்டும் நினைவுறுத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.

இத்திருப்பலியில் பங்கேற்க வந்திருந்த அருள்பணியாளர்களைப்பற்றி தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்ட கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், அருள்பணியாளர்கள் ஆற்றும் பணிகளில் எப்போதும் அமைதியும், நிறைவும் கிடைக்கும் என்பதை தாய் திருஅவை உணர்த்துவதில்லை, மாறாக, அவர்கள் சுமக்கும் சிலுவைகளை, இயேசுவும் அவர்களோடு இணைந்து சுமக்கிறார் என்பது மட்டுமே திருஅவை, அருள்பணியாளர்களுக்கு வழங்கும் உறுதி என்று கூறினார்.

மறையுரையின் இறுதியில், உலகெங்கும் பல்வேறு வழிகளில் துன்பங்களை அடைந்துவரும் அனைவரையும் குறிப்பிட்டு, அத்தனை துன்பங்களிலும், நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசு என்றும் துணையாய் இருக்கிறார் என்ற உறுதியை வழங்கி, கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தான் எழுதி அனுப்பிய மறையுரையை நிறைவு செய்துள்ளார்.

செப்டம்பர் 12, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புடபெஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் 52வது அகில உலக திருநற்கருணை மாநாட்டின் இறுதித் திருப்பலியை நிறைவேற்றுவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2021, 13:20