நாட்டின் புதிய பாதையில் மன்னிப்பு, ஒப்புரவு, பிறரன்பின் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இம்மாதம் 12ம் தேதி, Zambia நாட்டில், பொதுத்தேர்தல், அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது, எதிர்க்கட்சித்தலைவர், பெரும்பான்மை ஆதரவுடன் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, மற்றும், தோல்வியை ஏற்றுக்கொண்டு, அரசுத்தலைவர், பதவி விலகியுள்ளது, ஆகிய நிகழ்வுகள், தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக தெரிவித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.
கோவிட் பெருந்தொற்றும், பொருளாதார நெருக்கடிகளும் நாட்டை அச்சுறுத்தி வந்த வேளையில், பெரும் பதட்டநிலைகளுடன் துவங்கிய தேர்தல் பிரச்சாரங்கள், எவ்வித வன்முறைகளும் இன்றி முடிந்துள்ளது குறித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்ட Zambia ஆயர்கள், அரசுத்தலைவர் Edgar Lungu அவர்களுக்கு எதிராக தேர்தலில் நின்று வெற்றியடைந்த விவசாயத் தொழிலதிபர் Hakainde Hichilema அவர்கள், ஏறக்குறைய 10 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளது குறித்து, தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
அமைதியான முறையில் தேர்தல் நடக்கவும், தோல்வியை ஏற்று அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்திற்கு உதவவும் ஒத்துழைத்த அரசுத் தலைவர் Lungu அவர்களுக்கும், இந்த இக்கட்டான சுழல்களிலும், அமைதியையும் நாட்டின் இணைக்க வாழ்வையும் குலைக்காமல் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மக்களுக்கும் நன்றியை வெளியிடுவதாக, தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர் Zambia ஆயர்கள்.
நாட்டின் புதிய அத்தியாயத்தில், கிறிஸ்தவ மன்னிப்பு, ஒப்புரவு, பிறரன்பு ஆகியவைகளுடன் முன்னோக்கிச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள ஆயர்கள், முன்னோக்கிச் செல்லும் பாதையில், நல்மனதுடையோர் அனைவரின் ஒத்துழைப்பும் தொடர்ந்து தேவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர் .
வேலைவாய்ப்பின்மைகளாலும், இலஞ்ச ஊழல்களாலும், கொரோனா பெருந்தொற்றாலும் நெருக்கடிகளை சந்தித்துவரும் Zambia நாடு, அதிக வெளிநாட்டுக் கடனைக் கொண்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுள் ஒன்றாகும்.