தேடுதல்

Vatican News
அமெரிக்க ஆயர்கள் அமெரிக்க ஆயர்கள் 

ஆப்கான் மக்களை அமெரிக்காவில் குடியமர்த்தும் பணிகளில் ஆயர்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்கும் நிலையில் பணியாற்றியவர்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் வரவேற்கும் ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவ, அரசியல், மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவியுள்ள அந்நாட்டு குடிமக்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் வருவதை, தாங்கள் வரவேற்பதாக அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவம் வெளியேறிவரும் நிலையில், அந்த இராணுவத்திற்கு மொழிபெயர்ப்பாளர்களாகவும், தகவல் பரிமாற்றத்தில் உதவுபவர்களாகவும், பாதுகாப்பு, மற்றும், பொருட்களை எடுத்துச் செல்வதில் உதவுபவர்களாகவும் செயல்பட்ட ஆப்கான் மக்களை, தங்கள் நாட்டிற்கு குடிபெயர உதவும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடு புதியத் திட்டங்களைத் துவக்கியுள்ளதை வரவேற்றுள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.

இப்புதிய திட்டத்தின்கீழ், சிறப்பு குடியேற்ற அனுமதியுடன், ஆப்கான் குடிமக்களை ஏற்றி வந்த முதல் விமானம், வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் வந்திறங்கியது.

ஆப்கானிஸ்தான் நாட்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்கும் நிலையில் பணியாற்றியவர்களை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் வரவேற்பதில் பெருமையடைகிறோம் என தங்கள் கூட்டறிக்கையில் கூறியுள்ளனர், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Jose Gomez, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் குடியேற்றத்தாரர் அவையின் தலைவர், ஆயர் Mario Dorsonville.

தங்கள் வாழ்வையும், தங்களின் குடும்பத்தினர், மற்றும் நண்பர்களின் வாழ்வையும் பேராபத்துக்குள்ளாக்கி, அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்திற்கு உதவியவர்களின் தியாகம் அங்கீகரிக்கப்படாமல் போய்விடக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர்கள், ஆப்கான் மக்களை அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியமர்த்தும் பணிகளில் அமெரிக்க ஆயர்கள் தங்களை ஈடுபடுத்துவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டு துருப்புக்கள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் வெளியேறும் என அறிவித்த அமெரிக்க அதிபர் Joe Biden அவர்கள், அமெரிக்க இராணுவத்திற்கு அந்நாட்டில் உதவிய ஆப்கானிஸ்தான் குடிமக்கள் சிலருக்கு சிறப்புக் குடியுரிமை வழங்கப்படும் என்பதையும் அறிவித்திருந்தார். (CNA)

03 August 2021, 14:53