தேடுதல்

மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். - மாற்கு 7,20 மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். - மாற்கு 7,20 

பொதுக்காலம் 22ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

நாம், மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து, நம் சொல்லாலும், செயலாலும், இறைவனை நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 22ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

முனிவர்கள் வாழ்ந்துவந்த ஓர் ஆசிரமத்தில், நாள் தவறாமல் பூஜைகள் நிகழ்ந்தன. அந்த ஆசிரமத்தின் தலைவர், ஒரு பூனையை வளர்த்துவந்தார். வெள்ளை நிறம் கொண்ட அந்தப் பூனை, பூஜை நேரங்களில், குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே, ஆசிரமத் தலைவர், அப்பூனையை, பூஜை மண்டபத்தின் ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். ஒவ்வொரு நாளும், பூஜை ஆரம்பித்ததும், பூனையும் அங்கு வந்ததால், அதை, தூணில் கட்டிவைத்துவிட்டு, பூஜை துவங்கியது.

சில மாதங்கள் சென்று, அந்த ஆசிரமத் தலைவர் திடீரென காலமானார். மற்றொருவர் அப்பொறுப்பை ஏற்றார். தலைவர் இறந்தபிறகு, அவரால் வளர்க்கப்பட்டப் பூனை, பூஜை மண்டபத்திற்குச் செல்வதை நிறுத்தியது. ஆனால், ஆசிரமத்தில் இருந்தவர்களோ, ஒவ்வொரு நாளும், பூனையைத் தேடிக் கண்டுபிடித்து, அதை, குறிப்பிட்ட ஒரு தூணில் கட்டியபிறகே, தங்கள் பூஜையைத் துவக்கினர்.

இன்னும் ஓராண்டு கழித்து, அந்தப் பூனையும் இறந்தது. ஆசிரமத்தில் இருந்தவர்கள், அடுத்த நாள், பூஜையைத் துவக்குவதற்குமுன், மற்றொரு பூனையைத் தேடி, ஊருக்குள் சென்றனர். அதுவும், இறந்துபோன பூனையைப் போலவே, வெள்ளை நிறத்தில் உள்ள பூனையைத் தேடி, அலைந்து கண்டுபிடித்தனர். புதியப் பூனையை, ஆசிரமத்திற்குக் கொண்டுவந்து, முந்தின பூனை கட்டப்பட்டிருந்த அதேத் தூணில், அதைக் கட்டியபிறகே, தங்கள் பூஜையை ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகள் சென்றபின், அந்த ஆசிரமத்தில், பூனையின்றி பூஜை நடத்தக்கூடாது என்ற சட்டம் வகுக்கப்பட்டது. அச்சட்டமும், மிக நுணுக்கமாக வகுக்கப்பட்டது. எவ்வகைப் பூனையை வாங்கவேண்டும், அந்தப் பூனையை, பூஜை மண்டபத்தில், எந்தத் தூணில் கட்டவேண்டும், என்று, அச்சட்டத்தில், பல நுணுக்கங்கள் இணைக்கப்பட்டன. பூஜைக்கும், பூனைக்கும் உள்ள பிரிக்கமுடியாதத் தொடர்பைக் குறித்து, பக்கம், பக்கமாகப் பல விளக்கங்கள் எழுதப்பட்டன.

புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவரான இயேசுசபை அருள்பணியாளர், அந்தனி டி மெல்லோ அவர்கள் எழுதிய, 'The Song of the Bird' என்ற நூலில் காணப்படும் ஒரு கதை இது.

பூஜைக்கு இடையூறாக இருந்ததால் தூணில் கட்டப்பட்டது, பூனை. ஆனால், நாளடைவில், பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற நிலைக்கு அந்த ஆசிரமத்தினர் தள்ளப்பட்டனர். பூனை, பூஜைக்கு இடையூறாக இருந்தது என்ற அடிப்படை காரணம் மறக்கப்பட்டது. அதற்கு முற்றிலும் மாறாக, பூஜை செய்வதற்கு, பூனை தேவைப்பட்டது. பூனையைவிட பூஜை முக்கியம் என்ற உண்மை மறக்கப்பட்டு, பூஜையைவிட பூனை முக்கியம் என்ற நிலை உருவானது. சடங்குகளுக்கு உள்ள சக்தி இது.

நமது ஒவ்வொருநாள் வாழ்வும் சடங்குகளால் நிறைந்துள்ளது. காலையில் எழுந்ததும், பல் துலக்குவதில் துவங்கி, நாம் கடைபிடிக்கும் சடங்குகள் பல உள்ளன. இவை அனைத்தும், நமக்கு உதவி செய்வதற்காக, நாம் உருவாக்கிக்கொண்ட சடங்குகள். உதவி செய்வது என்ற அளவில் இவை பயன்படுத்தப்பட்டால், நல்லதுதான். ஆனால், நம் சமுதாய வாழ்வில், இன்னும் குறிப்பாக, சமய வாழ்வில் உருவாக்கப்பட்டுள்ள சடங்குகள், நமக்கு உதவி செய்வதற்குப்பதில், நம்மை, சங்கிலிகளாக பிணைக்கின்றன, அதனால், பிரச்சனைகள் எழுகின்றன.

இன்றைய நற்செய்தியில் சடங்கு பற்றிய விவாதம் எழுகிறது. கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது, பெரும் பிரச்சனையை உருவாக்குகிறது. முறைப்படி கழுவுதல் (Ritual Washing) என்பது, யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில், இச்சடங்கின் நுணுக்கங்கள் கூறப்பட்டுள்ளன:

மாற்கு நற்செய்தி 7: 3-4

பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

‘கைகளைக் கழுவுதல்’ என்ற இச்சடங்கு, இயேசுவின் பாடுகளின்போது நிகழ்ந்த ஒரு சடங்கை நினைவுக்குக் கொணர்கிறது. பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். (மத்தேயு 27:24) என்று மத்தேயு நற்செய்தியில் வாசிக்கிறோம்.

தன்னுடைய பொறுப்பிலிருந்தும், அத்துடன் வரக்கூடிய பழிகளிலிருந்தும் விலகிக்கொள்வதைக் காட்ட, பிலாத்து, கைகளைக் கழுவினான். இந்தியா உட்பட, ஒரு சில ஆசிய கலாச்சாரங்களில், கைகளை மட்டும் கழுவாமல், ஒருவர், தன் தலைமீது தண்ணீரை ஊற்றி, உடல் முழுவதையும் கழுவி, பொறுப்பிலிருந்தும், பாவத்திலிருந்தும் விலகிக்கொள்வதை உணர்த்துவார். அல்லது, ஒரு குளத்திலோ, ஆற்றிலோ மூழ்கி எழுந்து, இச்சடங்கை நிறைவேற்றுவதும் உண்டு. கரங்களில், அல்லது உடலெங்கும் ஊற்றப்படும் தண்ணீர், பொறுப்பு, பழி, பாவம் அனைத்தையும் கழுவும் என்ற கருத்தில் இச்சடங்கு பின்பற்றப்படுகிறது.

இதற்கு மாறாக, ஷேக்ஸ்பியர் அவர்கள் உருவாக்கிய 'மாக்பெத்' நாடகத்தில், அரசரைக் கொன்ற தளபதி மாக்பெத்தும், கொலைசெய்ய அவரைத் தூண்டிய மாக்பெத்தின் மனைவியும், செய்யப்பட்டக் கொலைகளின் இரத்தப்பழியை, தண்ணீரைக்கொண்டு கழுவமுடியாமல் தவிப்பதை, நாடக ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

மாக்பெத்தின் மனைவி, தூக்கத்தில் நடந்தபடியே, தன் கைகளை மீண்டும், மீண்டும் தேய்த்துக்கொண்டு, கைகளில் உள்ள கறை போகவில்லை என்றும், அரேபியாவின் அனைத்து நறுமணப் பொருள்களும் தன் கைகளில் உள்ள இரத்த நாற்றத்தை நீக்காது என்றும் புலம்புகிறார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் 'கைகளை மிகக் கவனமாகக் கழுவுங்கள்' என்ற அறிவுரையை, நம் உள்ளங்களில் ஆழப்பத்திக்க, உலக நலவாழ்வு நிறுவனம் (WHO), இந்தக் காட்சியில் வரும் வசனத்தைப் பயன்படுத்தியது.

யூதர்கள் வெளியிலிருந்து வந்ததும் தங்களையும், வாங்கிவந்த பொருள்களையும் கழுவுவர் என்று, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள சடங்கை, மேலோட்டமாகப் பார்த்தால், இது, மக்களின் உடல்நலனை மனதில்கொண்டு உருவாக்கப்பட்ட வழிமுறை என்று நாம் பொருள்கொள்ளமுடியும். சந்தையிலிருந்து வாங்கிவரும் பொருள்களும், வெளியில் சென்று வீடு திரும்புவோரும், கிருமிகள் பலவற்றைச் சுமந்துவரக்கூடும். எனவே, கைகளையும், பொருள்களையும் கழுவுவது, உடல்நலனுக்கு உகந்தது என்பதை, யாரும் மறுக்கஇயலாது. 'கைகளைக் கழுவுங்கள்' என்ற சொற்கள், கடந்த பல மாதங்களாக, ஓர் எச்சரிக்கையாக ஆழ்மனதில் செதுக்கப்பட்டுள்ள நமக்கு, யூதர்கள் பின்பற்றிய இச்சடங்கு, சரியான வழி என்றே சொல்லத்தோன்றுகிறது.

கைகளைக் கழுவுங்கள், சமுதாய தூரத்தைக் கடைபிடியுங்கள், முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள் என்று, அடுக்கடுக்காய் நமக்கு வழங்கப்பட்ட விதிகள் அனைத்தையும், நலவாழ்வு, தற்காப்பு என்ற அளவில் சிந்திக்கும்போது, அவை சரியென்றே தோன்றுகிறது. ஆனால், இந்த விதிமுறைகளுக்குப் பின்புலத்தில், நாமாகவே உருவாக்கிக்கொள்ளும் ஏனைய சிந்தனை ஓட்டங்கள், நம்மை வேறுசில பாகுபாடுகளுக்குள் அழைத்துச் செல்லக்கூடும். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ‘கிருமிகளைச் சுமப்பவர்கள்’ என்ற அச்சத்தை, அளவுகடந்தவண்ணம் நமக்கு நாமே ஊட்டி வளர்த்தால், நாம் 'சுத்தமானவர்கள்' எனவே, 'சுத்தமற்றவர்களை' விட்டு தூரச்செல்ல வேண்டும் என்ற மனநிலை நமக்குள் ஆழப்பதியக்கூடும். 'சுத்தமானவர்கள்' 'சுத்தமற்றவர்கள்' என்ற இத்தகைய பாகுபாட்டு மனநிலையே, யூதர்களின் கழுவும் சடங்குகளின் பின்புலமாக இருந்தது.

பரிசேயர்களும், யூதர்களும் கழுவுதலை ஒரு சடங்காக மேற்கொள்ள அவர்களை அதிகம் தூண்டியது, உடல்நலனைக் காத்துக்கொள்ளும் அக்கறை என்பதைக்காட்டிலும், தங்கள் இனத்தின் மேன்மையை நிலைநாட்டும் ஆணவம் என்றே சொல்லவேண்டும். இதனாலேயே, இதைக்குறித்து இயேசு வேதனையடைந்தார். வெளி உலகில் யூதர்கள் நடமாடிய இடங்கள், சந்தையில் வாங்கிய பொருள்கள், ஆகியவை, புறவினத்தாரும் நடமாடிய இடங்கள், அல்லது, பயன்படுத்திய பொருள்கள் என்பதால், அவை 'தீட்டுப்பட்டவையாக' மாறின. இந்தக் காரணமே, கழுவுதல் சடங்கை மிக கவனமாக மேற்கொள்ள, யூதர்களைத் தூண்டியது. இந்தியாவில், தங்களையே உயர்ந்தவர்கள் என்றும், ஏனையோர் தாழ்ந்தவர்கள், அல்லது, தீண்டத்தகாதவர்கள் என்றும் எண்ணிவரும் பாரம்பரிய பிராமணர்கள் சமுதாயத்தில், இத்தகைய கழுவுதல் சடங்குகள், இன்றும், ஆழமாக வேரூன்றியுள்ளன.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இத்தகைய ஆபத்து உருவாகக்கூடும் என்பதை உணர்ந்த மோசே, இறைவன் வழங்கிய சட்டங்களைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று, மக்களுக்கு அறிவுரை வழங்குவதை, இன்றைய முதல் வாசகத்தில், இவ்வாறு வாசிக்கிறோம்:

இணைச்சட்டம் 4: 1-2

இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.

மோசே தந்த தெளிவான அறிவுரையை மறந்துவிட்டு, இறைவன் தந்த கட்டளைகளில் புதிய புதிய நுணுக்கங்களைப் புகுத்தி, அவற்றை, சட்டங்களாக மாற்றுவதில், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இறைவன் தந்த பத்து கட்டளைகளை சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் 613 சட்டங்களை வகுத்துவைத்தனர். (Hebrew: "613 mitzvot")

சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், சடங்குகள் என்ற பல பாரங்களைச் சுமந்து, பழகிப்போகும் ஒரு சமுதாயம், விரைவில், இவற்றை, கடவுள் நிலைக்கு உயர்த்திவிடக்கூடும். இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை விடுத்தார்:

என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது! (எசாயா 29 : 13)

என்று இறைவாக்கினர் எசாயா விடுத்த அந்த எச்சரிக்கையை, இயேசு, இன்றைய நற்செய்தியில் மீண்டும் நினைவுறுத்துகிறார்.

உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தளவில் இறைவனை நெருங்கியிருக்கும் உண்மையான மதம், அல்லது சமயம் சார்ந்த வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை, இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு தெளிவாகக் கூறியுள்ளார்:

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும். (யாக்கோபு 1:27)

புனித யாக்கோபு வரையறுத்த இத்தகைய சமயவாழ்வை, முழுமையாகப் பின்பற்றி,  வறியோருடன் மிக நெருங்கி வாழ்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள் செய்துவந்த பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர், அவரிடம் ஒருநாள், "உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்யமுடிகிறது?" என்று கேட்டார். அன்னை அவரிடம், "நான் 18 வயதில் என் குடும்பத்தினரைவிட்டு, துறவறவாழ்வில் இணைந்தபோது, 'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக்கொள். அவருடன் நடந்துசெல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழியனுப்பி வைத்தார்கள். அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளன" என்று சொன்னார்.

உதடுகளால் மட்டுமல்லாமல், உள்ளத்தாலும், தன் முழு வாழ்வாலும், இறைவனுடனும், வறியோருடனும் மிக நெருங்கிவாழ்ந்த புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாளை, செப்டம்பர் 5ம் தேதி, அடுத்த ஞாயிறன்று, நினைவுகூர்கிறோம். அந்த அன்னையின் பரிந்துரையால், நாம், மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து, நம் சொல்லாலும், செயலாலும், இறைவனை நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2021, 14:32