தேடுதல்

உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கத்தைப் பகிர்ந்துகொண்ட Mutaz Essa Barshim, மற்றும், Gianmarco Tamberi உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கத்தைப் பகிர்ந்துகொண்ட Mutaz Essa Barshim, மற்றும், Gianmarco Tamberi  

பொதுக்காலம் 19ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

ஒலிம்பிக் வரலாற்றில், இரு வீரர்கள், தங்களுக்குள் தங்கப்பதக்கங்களைப் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தது, இதுவே முதல்முறை

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 19ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

சென்ற ஞாயிறு, ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளானதால், நம் எண்ணங்கள் ஜப்பானை நோக்கி திரும்பின. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாடு நிகழ்த்திய அணுகுண்டு தாக்குதல்களையும், அந்த அழிவுகளைப் பார்த்தபின்னரும், தொடர்ந்து, அணுசக்தியை நம்பி, நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் ஆபத்துக்களையும் சிந்தித்தோம். இந்த ஞாயிறு, மீண்டும் ஒருமுறை, ஜப்பான் நாட்டுக்குத் திரும்புகிறோம். அங்கு, டோக்கியோ நகரில், கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் கோடை விளையாட்டுக்கள், ஆகஸ்ட் 8, இந்த ஞாயிறன்று நிறைவுபெறுகின்றன. இவ்வேளையில், ஒலிம்பிக் விளையாட்டுகளையும், அவற்றின் வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களையும் நம் ஞாயிறு சிந்தனைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்வோம்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது, ஒலிம்பிக் விளையாட்டுக்களா? ஒலிம்பிக் போட்டிகளா? என்ற கேள்வியிலிருந்து நம் சிந்தனைகளைத் துவக்குவோம். 'விளையாட்டுக்கள்' என்று சொல்வதற்கும், 'போட்டிகள்' என்று சொல்வதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. மதம், அரசியல், கல்வி, வேலை என்ற அனைத்து தளங்களிலும் போட்டிகளை உருவாக்குவதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ள இவ்வுலகப் போக்கு, விளையாட்டுக்களையும், போட்டிகள் என்ற கோணத்தில் மட்டுமே காண்பதற்கு நமக்குக் கற்றுத்தருகிறது. ஒலிம்பிக் விளையாட்டுக்கள், தொலைக்காட்சி வழியே, நேரடியாக ஒளிபரப்பாகத் துவங்கியதிலிருந்து, வெறும் விளையாட்டுப் போட்டியை, உணர்ச்சிகள் நிறைந்த வாழ்வுப் போட்டியாக வடிவமைத்து, விளையாட்டுத் திடல்களை, போர்க்களம்போல, ஊடகங்கள் காட்டிவருவது, கவலையைத் தருகிறது.

நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தந்தை என்று அழைக்கப்படும் Pierre de Coubertin அவர்கள், "வெற்றியடைவது மிகவும் முக்கியமல்ல, பங்கேற்பதே மிகவும் முக்கியம்" என்ற சொற்களை, ஒலிம்பிக் விளையாட்டுக்களின் விருதுவாக்காக வழங்கினார். இந்த எண்ணத்தை, அவர், 1908ம் ஆண்டு, இலண்டனில் நடைபெற்ற விளையாட்டுக்களின்போது, ஞாயிறு மறையுரை ஒன்றில் கேட்டதாகக் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு விருதுவாக்கு, மேலே கூறப்பட்ட விருதுவாக்கைவிட புகழ்பெற்றது. அதுதான், இலத்தீன் மொழியில் “Citius, Altius, Fortius” என்ற விருதுவாக்கு. "இன்னும் வேகமாக, இன்னும் உயரமாக, இன்னும் சக்திமிகுந்ததாக" என்பது இதன் பொருள். இந்த இரு விருதுவாக்குகளையும் Coubertin அவர்களே வழங்கியிருந்தாலும், ஒலிம்பிக் விளையாட்டுக்களில், ஒப்புமையையும், போட்டியையும் வலியுறுத்தும், இரண்டாவது விருதுவாக்கே அதிகமாக அறியப்படுகிறது.

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெரிதுபடுத்தப்படும் ஒப்புமைகளும் போட்டிகளும், இறுதியில், வீரர்கள் பெறும் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வழியே உறுதிசெய்யப்படுகின்றன. தங்கம் வெல்வதை, ‘வெற்றி’ என்றும், வெள்ளி, அல்லது வெண்கலம் வெல்வதை ஏறத்தாழ 'தோல்வி'க்கு ஈடாகவும் எண்ணிப்பார்க்கும் போக்கு நிலவிவருகிறது.

இவ்வாறு போட்டிகளை வளர்த்து, தங்கம் பெற்றவரை மட்டும் கொண்டாடிவரும் ஒலிம்பிக் நிகழ்வுகளின் நடுவே, விளையாட்டு வீரர்களின் உண்மையான உன்னத உணர்வுகளை, அவர்களுக்குள் இருக்கும் நட்பை, பரிவை வெளிக்கொணரும் நிகழ்வுகளும் ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் இடம்பெறுகின்றன. தற்போது முடிவுற்ற டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஏற்பட்ட ஓர் அழகான நிகழ்வு இதோ:

உயரம் தாண்டும் போட்டியின் இறுதிச் சுற்றில், 2.37 மீட்டர் (7.77 அடி) உயரத்தை, ஏனைய வீரர்களால் தாண்ட இயலாதபோது, கத்தார் நாட்டைச் சேர்ந்த Mutaz Essa Barshim அவர்களும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த Gianmarco Tamberi அவர்களும் தாண்டிவிட்டனர். அதைத்தொடர்ந்து, இருவரும், 2.39 மீட்டர் தாண்ட முயன்று தோற்றனர். அவ்வேளையில், மீண்டும், மீண்டும் போட்டியிட்டு, அந்த உயரத்தைத் தாண்டி தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு, இருவருக்கும் தரப்பட்டது. அவ்வாறு போட்டியிட்டு, ஒருவர் தங்கமும், ஒருவர் வெள்ளியும் பெறுவதற்குப் பதில், இருவரும் இணைந்து, தங்கப்பதக்கத்தைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்.

Barshim, Tamberi ஆகிய இருவரும் 2010ம் ஆண்டு ஜுனியர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஈடுபட்ட ஆண்டிலிருந்து நண்பர்கள். 2010க்கும், 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்விரு வீரர்களும் வெவ்வேறு நேரங்களில், காலில் ஏற்பட்ட சிக்கல்களால், ஒரு சில போட்டிகளில் கலந்துகொள்ள இயலாமல் போனது. அவ்வேளைகளில், அவ்விருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து, தங்கள் கால்கள் குணமாகி, மீண்டும் போட்டிகளில் ஈடுபட உற்சாகமூட்டிவந்தனர். எனவே, அவ்விருவரும் ஆகஸ்ட் 1, கடந்த ஞாயிறன்று, தங்கப்பதக்கத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டது, தங்கள் விளையாட்டுத் திறமைக்கு மட்டுமல்ல, அதைவிட கூடுதலாக தங்கள் நட்பிற்கு அவர்கள் வழங்கிக்கொண்ட தங்கப்பதக்கம் என்று கூறினர். "விளையாட்டுப் போட்டிகளைத் தாண்டி, எங்கள் கனவுகளுக்கு நாங்கள் கொடுத்துள்ள வடிவம், இந்த தங்கப்பதக்கத்தை பகிர்ந்துகொண்ட நிகழ்வு. இதை, நாங்கள் இளைய தலைமுறையினருக்கு ஒரு செய்தியாக சொல்ல விழைகிறோம்" என்று Barshim அவர்கள் கூறினார்.

ஒலிம்பிக் வரலாற்றில், இரு வீரர்கள், தங்களுக்குள் தங்கப்பதக்கங்களைப் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தது, இதுவே முதல்முறை. நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இதுபோன்ற ஒரு முடிவு இனி எடுக்கப்படுமா, அல்லது, போட்டியும், வெற்றியும் மட்டுமே உயர்த்திப் பிடிக்கப்படுமா என்பதை, காத்திருந்து பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டிலும் இத்தகைய அழகான நிகழ்வுகள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. ஆனால், இந்த உன்னத உணர்வுகளை மூழ்கடிக்கும் வண்ணம், முதலிடத்தைப் பெறுவதற்காக காட்டப்படும் தீராத பசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. போட்டி, வெற்றிபெறும் தீராத பசி போன்ற வெறிகளை ஊதி வளர்க்கும் உலகப்போக்கைப்பற்றி சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.

கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும் இணைக்கும் விவிலியப் பகுதிகளைச் சிந்தித்து வந்துள்ளோம். இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் இன்றைய வாசகங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி, உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் கூறப்பட்டாலும், இவற்றைச் சிறிது ஆழமாக ஆய்வு செய்யும்போது, மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல்வேறு ‘பசி’கள், இந்த வாசகங்களில் வெளிப்படுவதை நாம் உணரலாம். எடுத்துக்காட்டாக, பாலைநிலத்தில் அமர்ந்து, தான் சாகவேண்டுமென்று மன்றாடிய இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது (1அர.19:4-8). இப்பகுதியைமட்டும் வாசிக்கும்போது, பசித்திருந்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது சிந்தனைகள் நின்றுபோக வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலைநிலத்திற்குச் சென்றார், அவர் ஏன் சாகவிரும்பினார் என்பதை சிந்திக்கும்போது, இந்நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுவகையானப் பசிகளும், அவைகளால் உருவாகும் வெறிகளும் வெளிப்படுகின்றன.

இஸ்ரயேல் அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறியில் –பசியில் - இருந்ததால், எலியா, பாலைநிலத்திற்கு ஓடவேண்டியதாயிற்று. அரசி ஈசபேல் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பாகால் தெய்வம், போலியான தெய்வம் என்பதை, இறைவாக்கினர் எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறிகொண்டார்.

தெய்வ வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும் ஓர் உன்னத முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பணம், பதவி, போன்ற போலி தெய்வங்களை வழிபடும் மனிதர்களை அவ்வப்போது சந்தித்துவருகிறோம். அத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போர், தங்கள் தெய்வங்கள் போலியானவை என்று, துணிவுடன் சொன்னவர்களை, தங்கள் கொலைப்பசிக்கு இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.

இறைவாக்கினர் எலியாவைப்போல, மனித வரலாற்றில், பல்வேறு காலங்களில் தோன்றிய இறைவாக்கினர்கள், போலி தெய்வங்களை வணங்குவோருக்கு சவால்விடும்வண்ணம் உண்மைகளை எடுத்துரைத்துள்ளனர். அந்த வரிசையில், நாம் வாழ்ந்துவரும் இக்காலத்தில், இந்திய நடுவண் அரசின் பிரதமரும், ஏனைய அமைச்சர்களும் தொழுதுவரும், பதவியும், பணமும், போலி தெய்வங்கள் என்று, துணிவுடன் பேசிய, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இவ்வாண்டு ஜூலை 5ம் தேதி கொலையுண்டது, இன்னும் நம் நினைவுகளைவிட்டு அகலமறுக்கிறது. இவரைப்போல, உண்மையை எடுத்துரைத்து, அதன் விலையாக தங்கள் உயிரை வழங்கிவரும் இறைவாக்கினர்களை, இந்த ஞாயிறன்று நினைவுகூர்ந்து, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

பொதுவாகவே, உண்மைகள் கசக்கும். அந்தக் கசப்பான மருந்தை அருந்தி, குணம் பெறுவதற்குப் பதில், மருந்தைத் துப்பிவிட முயல்கிறோம். ஒருசில வேளைகளில், அந்த மருந்தைத் தந்தவர்மீதும் நமது கோபத்தைக் காட்டுகிறோம். இத்தகைய ஒரு சூழலை இன்றைய நற்செய்தி சித்திரிக்கிறது. யோவான் நற்செய்தி 6: 41-51

இயேசு கூறிய உண்மைகளைக் கேட்பதற்கு, அவரைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள், பாலைநிலம் சென்றனர் என்பதையும், அவர்களது உள்ளப்பசியைப் போக்கிய இயேசு, அவர்களது வயிற்றுப்பசியையும் தீர்த்தார் என்பதையும், இருவாரங்களுக்கு முன் நற்செய்தியாகக் கேட்டோம். தங்கள் பசிபோக்கும் எளிதான, குறுக்குவழி, இயேசுவே, என்றெண்ணிய மக்கள், அவரை, மீண்டும் தேடிச்சென்றனர் என்பதை, சென்றவார நற்செய்தியில் கேட்டோம். தன்னைத் தேடிவந்த மக்களைப் பயன்படுத்தி, தன் புகழை வளர்த்துக்கொள்ளும் பசிகொண்ட சாதாரண அரசியல் தலைவராக இயேசு வாழ்ந்திருந்தால், உணவைப் பலுகச்செய்த புதுமையை மீண்டும், மீண்டும் நிகழ்த்தி, தன் புகழ் பசியைத் தீர்த்திருப்பார். அதற்குப் பதிலாக, இயேசு, மக்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு சில உண்மைகளைக் கூறினார்.

மக்கள் பேராசைப் பசி கொண்டதும், அதைத் தீர்க்க, தன்னை ஒரு குறுக்கு வழியாகக் கருதி, அவர்கள் தேடி வந்ததும் தவறு என்ற உண்மைகளை, இயேசு, வெளிப்படையாகக் கூறினார். அவர் வழங்கிய கசப்பு மருந்தை ஏற்க மறுத்த யூதர்கள், மருந்தைக் கொடுத்த இயேசுவை எதிர்க்கும் முயற்சிகளில் இறங்கினர்.

உண்மையைக் கூறும் ஒருவரை, கருத்தளவில் எதிர்க்க முடியாதவர்கள், பொதுவாகப் பயன்படுத்தும் மற்றொரு வழி, உண்மையைச் சொன்னவரின் பிறப்பு, குலம் இவற்றை கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவது! இத்தகைய எதிர்ப்புக் கணைகளையே, யூதர்கள் இயேசுவின் மீது தொடுத்தனர். தனது பிறப்பைக்குறித்து அவர்கள் ஏவியக் கணைகளைப் பொருட்படுத்தாத இயேசு, மனம் தளராமல், மக்களுக்கு நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன் சொன்னார். அவர்கள், நிலையான, நிறைவான வாழ்வைப் பெறுமாறு அழைத்தார்.

இறுதியாக ஓர் எண்ணம்... ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6ம் தேதி, இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை திருஅவை கொண்டாடும் வேளையில், ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நிகழ்வையும் சிந்திக்கிறோம். 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் பெரும் அழிவுகளைச் சந்தித்த ஜப்பான் நாடு, அந்த அழிவுகளிலிருந்து மீண்டெழுந்து, 19 ஆண்டுகளுக்குப் பின், 1964ம் ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டுக்களை முதல்முறையாக நடத்திய ஆசிய நாடு என்ற பெருமையைப் பெற்றது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அணுகுண்டு வீழ்ந்த அன்று பிறந்த Sakai Yoshinori என்ற குழந்தை, பின்னர் ஒரு விளையாட்டு வீரராக, டோக்கியோ நகரில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்கவிழாவில், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்தார். மனிதர்களாகிய நாம், எத்தனை துன்பங்களால் வதைக்கப்பட்டாலும், மீண்டும் எழக்கூடியவர்கள் என்பதை, ஜப்பான் நாடும், இளம்வீரர் Yoshinori அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர். தற்போது நம்மை வதைத்துவரும் கோவிட் பெருந்தொற்று என்ற அழிவிலிருந்து நாம் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை, இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கவும், பதவி, பணம் ஆகிய தீராத பசிகளால் இனி இவ்வுலகம் துன்புறாமல் இருக்கவும், சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2021, 14:14