தேடுதல்

Vatican News
அமேசான் திருஅவையின் கோவிட்-19 தடுப்பூசிகள் திட்டம் அமேசான் திருஅவையின் கோவிட்-19 தடுப்பூசிகள் திட்டம்  (AFP or licensors)

அமேசான் திருஅவையின் கோவிட்-19 தடுப்பூசிகள் திட்டம்

உலகின் நுரையீரலான அமேசான் பகுதியில், இவ்வாரத்தில் பெருந்தொற்று உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தைத் (1,00,037) தாண்டியுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமேசான் பருவமழைக் காடுகள் பகுதியில், கொரோனா பெருந்தொற்றால் உயிரிழப்புக்கள் அதிகரித்துவருவதை முன்னிட்டு, REPAM எனப்படும், அமெரிக்கத் திருஅவையின் அமேசான் பாதுகாப்பு கூட்டமைப்பு, “Vacuna Amazonia” என்ற புதியதொரு தடுப்பூசி நடவடிக்கையை இவ்வாரத்தில் துவக்கியுள்ளது.

 உலகின் நுரையீரலான அமேசான் பகுதியில், பெருந்தொற்றால், இவ்வாரத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் (1,00,037)  உயிரிழந்துள்ள நிலையில், அமேசானின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு, மக்கள், தடுப்பூசிகள் பெறுவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கு, REPAM அமைப்பு திட்டமிட்டுள்ளது.

 தடுப்பூசிகள் பற்றாக்குறை, அமேசானின் பல்வேறு பகுதிகளில், தடுப்பூசிகள் பற்றி வழங்கப்படும் தவறான தகவல்கள் உட்பட சில விவகாரங்கள், பெருந்தொற்று உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளன என்று, REPAM அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

தடுப்பூசிகள் பற்றி தவறான தகவல்கள் கொடுக்கப்படுவதே, சில பகுதிகளில் தடுப்பூசி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாய் உள்ளது என்றும், பலர் தடுப்பூசிகள் பெற மறுப்பு தெரிவிக்கின்றனர் என்றும் கூறியுள்ள அந்த அமைப்பு, பெருந்தொற்றின் மூன்றாவது அலை, மக்களின் வாழ்வுக்கு கடும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தென் அமெரிவிக்காவிலுள்ள அமேசான் பருவமழைக் காடுகள் பகுதியில், Yanomamo, Kayapo போன்ற பழங்குடி மக்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். 32 ஆயிரம் முதல், 39 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியில் மக்களின் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாக, சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஐரோப்பியர்கள் தென் அமெரிக்காவுக்கு முதலில் சென்று குடியேறியபோது ஏறத்தாழ 68 இலட்சம் பழங்குடிகள் இருந்தனர். ஆனால் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தால் அம்மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறை, அடிமைத்தனம், மற்றும் நோய்களால், தற்போது அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. (Fides)

07 August 2021, 14:56