தேடுதல்

ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்டுள்ள அமைதிப் பூங்கா ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்டுள்ள அமைதிப் பூங்கா 

ஹிரோஷிமா, நாகசாகி அழிவுகளின் 76வது ஆண்டு நினைவு

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டு வீசிய கொடுமையின் 76வது ஆண்டு நினைவை, Pax Christi என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு பல்வேறு வழிகளில் சிறப்பிக்க திட்டமிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய இரு நாள்களில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டு வீசிய கொடுமையின் 76வது ஆண்டு நினைவை, Pax Christi என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு பல்வேறு வழிகளில் கடைபிடிக்க திட்டமிட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை, இன்னும் 40 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று, இவ்வாண்டு மார்ச் 16ம் தேதி, பிரித்தானிய பிரதமர், அறிக்கை வெளியிட்டதையடுத்து, இந்த ஆபத்தான முயற்சியைக் கைவிடும்படியாக பிரித்தானியாவில் உள்ள Ursuline சகோதரிகள், ஒரு கொள்கைப்பரப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பிரித்தானிய அரசு அணு ஆயுத குவிப்பு முயற்சியை கைவிட்டு, அணு ஆயுத ஒழிப்பு முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று Ursuline சகோதரிகள் மேற்கொண்டுள்ள கொள்கைப்பரப்பு முயற்சிகளில், Pax Christi அமைப்பும் இணைந்துள்ளது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டு வீசப்பட்டதை நினைவுகூரும் வண்ணம், ஆகஸ்ட் 6, இவ்வெள்ளியன்று, காலை 8.15 மணிக்கு அமைதியான நிமிடங்களை Pax Christi அமைப்பு கடைபிடிக்கிறது.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தின் பல்வேறு இடங்களில் மக்கள் மௌன ஊர்வலங்களையும், அணு ஆயுத ஒழிப்பை வலியுறுத்தி, பதாகைகள் ஏந்திய ஊர்வலங்களையும் மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலண்டன் நகரில், வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்திற்கு முன், பகல் 11 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை, ஓர் அமைதி வழிபாடு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆகஸ்ட் 9, வருகிற திங்களன்றும் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நாகசாகி அணுகுண்டு தாக்குதலை நினைவுகூரும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருப்பதாக Pax Christi அமைப்பு அறிவித்துள்ளது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும்  9 ஆகிய இரு நாள்களில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு வீசிய அணுகுண்டுகளால், உடனடியாக, 2,26,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வந்த 5 ஆண்டுகளில் அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் 3,40,000த்திற்கும் அதிகமானோர் இறந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2021, 14:18