தேடுதல்

மியான்மார் ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் சார்லஸ் போ மியான்மார் ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் சார்லஸ் போ 

உண்மையான அதிகாரம், மக்களுக்கு சேவைபுரிவதிலிருந்து பிறக்கிறது

கர்தினால் போ : அமைதி, வளம் என்ற கனவுகளுடன் பிறந்த மியான்மார் நாட்டில், ஒரு சிலரின் தன்னல ஆசைகளால், பொருளாதார, மற்றும் சுற்றுச்சூழல் அநீதிகள் இடம்பெற்றுவருகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

எந்த ஒரு நீதியான நாட்டிலும், அரசின் அதிகாரம் என்பது, மக்களைவிட முக்கியமானது அல்ல, உண்மையான அதிகாரம் என்பது, மக்களுக்குரிய சேவையிலிருந்தே பிறக்கிறது என, ஆகஸ்ட் 22, இஞ்ஞாயிறன்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார், மியான்மார் கர்தினால் Charles Bo

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல்தேதி, மியான்மாரில், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, அப்பாவி மக்கள் பல்வேறு துயர்களை அனுபவித்துவரும் நிலையில், அவர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் கர்தினால் போ அவர்கள், மக்களுக்குரிய சேவையிலிருந்து தங்கள் அதிகாரத்தைப் பெறாத எந்த ஓர் அரசும் கடவுளிடமிருந்து தங்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள் எனக் கூறமுடியாது என தெரிவித்தார்.

நீதியின்மீது கட்டப்படாத எந்த ஒரு நாடும் சிலைவழிபாட்டை மேற்கொள்வதை ஒத்ததாகும் என்றுரைத்த கர்தினால் போ அவர்கள், அரசு ஒரு கண், மக்கள் இன்னொரு கண் என இரு கண்களுடன் ஒரே பார்வையை கொண்டிருக்கும் அரசே உண்மையான அரசு என எடுத்துரைத்தார்.

அமைதி, வளம் என்ற கனவுகளுடன் பிறந்த மியான்மார் நாட்டில், ஒரு சிலரின் தன்னல ஆசைகளால், பொருளாதார, மற்றும் சுற்றுச்சூழல் அநீதிகள் இடம்பெற்றுவருகின்றன என்ற ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் மியான்மார் ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் போ.

மியான்மாரில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு நடந்தபின், கடந்த ஆறு மாதங்களில், 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசியல், பொருளாதார, மற்றும் சமுதாய பதட்ட நிலைகளைச் சந்தித்துவரும் மியான்மார் நாட்டில், கோவிட் பெருந்தொற்றாலும் மக்கள் துயர்களை அனுபவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும், மியான்மாரில், 4000 பேர், புதிதாக இந்நோயைப் பெற்றுவருவதாக, இராணுவ அரசின் நல அமைச்சகம் தெரிவிக்கின்றபோதிலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என, செய்திநிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2021, 14:19