தேடுதல்

பெருங்கோவில் உள் அமைப்பு பெருங்கோவில் உள் அமைப்பு  

திருத்தந்தையர் வரலாறு – ஜெர்மன் திருத்தந்தையர் காலம்.

திருத்தந்தை இரண்டாம் கிளமென்டின் உடல், இத்தாலியிலிருந்து, ஜெர்மனிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. ஜெர்மனியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒரே திருத்தந்தை இவர் மட்டுமே.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தையர்கள் ஒன்பதாம் பெனடிக்ட், மூன்றாம் சில்வெஸ்டர், 6ம் கிறகரி என மூவரும் ஒரே நேரத்தில் உயிரோடு இருந்த காலத்தில் Sutriயில் பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. மன்னர் மூன்றாம் ஹென்றியின் தலையீட்டின்பேரில், திருஅவையின் தலைமைப் பொறுப்பு குறித்த பிரச்சனைக்கு தீர்வுகாண அழைக்கப்பட, அக்கூட்டத்தை திருத்தந்தை 9ம் பெனடிக்ட் புறக்கணித்தார். மூன்றாம் சில்வெஸ்டரின் பதவி பறிக்கப்பட்டு, துறவுமடத்தில் தங்க பணிக்கப்பட்டார். மூன்றாவது திருத்தந்தையான 6ம் கிரகரியோ தன் தரப்பு வாதத்தை எடுத்துரைத்துவிட்டு, தானே பதவி விலகிக்கொண்டார். அதாவது, எதிரெதிர் பிரபுக் குழுக்களால் ஆதரிக்கப்பட்ட திருத்தந்தையர்கள், ஒன்பதாம் பெனடிக்ட், மூன்றாம் சில்வெஸ்டர், மற்றும், திருஅவையை அழிவிலிருந்து காப்பாற்ற விரும்பிய மறுமலர்ச்சி கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 6ம் கிரகரியும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர், மற்றும் பதவி விலகினர். இப்போது திருத்தந்தையின் நாற்காலி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இத்தகைய ஒரு சூழலில்கூட, திருத்தந்தையை தேர்வு செய்வதில் மன்னர் மூன்றாம் ஹென்றி தலையிட முடியவில்லை. ஏனெனில், அவர் அதுவரை திருத்தந்தையால் பேரரசராக முடிசூட்டப்படவில்லை. இருப்பினும், உரோமைய மக்கள், நல்ல ஒரு திருத்தந்தையை தேர்வுசெய்யும்படி மன்னரையே வேண்ட, அவரும் அதிகாரமிக்கவராயிருந்த Bremen பேராயர் அடல்பெர்ட் (Adalbert) அவர்களை தேர்வு செய்தார். ஆனால் பேராயர் அடல்பெர்ட் அவர்களோ, அப்பதவியை ஏற்கமறுத்து தன் நண்பரான Bamberg  ஆயர் Suidger அவர்களை பரிந்துரைத்தார். இவ்வாறு ஆயர் Suidger திருத்தந்தையாக பதவியேற்றார். கிறிஸ்து பிறப்பு நாளன்று, அதாவது, 1046ம் ஆண்டு, டிசம்பர் 25ம் நாள் திருத்தந்தையாக பொறுப்பேற்ற உடனேயே, மன்னர் மூன்றாம் ஹென்றியையும், அவர் மனைவி ஆக்னஸையும், பேரரசர் மற்றும் பேரரசியாக முடிசூட்டினார், திருத்தந்தை இரண்டாம் கிளமென்ட் என்ற புதுப்பெயர் எடுத்துக்கொண்ட ஆயர் Suidger.

திருத்தந்தை இரண்டாம் கிளமென்ட் பதவியேற்றவுடனேயே பல சீர்தருத்தப் பணிகளைத் துவக்கிவிட்டார். ஆன்மீக விடயங்களை விற்பதோ வாங்குவதோ தடைசெய்யப்பட்டது. தடையை மீறியவர்கள் திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர். பேரரசராக முடிசூட்டப்பட்ட மூன்றாம் ஹென்றியுடன் ஜெர்மனிக்குச் சென்ற திருத்தந்தை இரண்டாம் கிளமென்ட், அங்கு, 925ம் ஆண்டு மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட அருட்சகோதரி Wiboradaவை புனிதராக அறிவித்தார். இதையெல்லாம் முடித்துக்கொண்டு உரோமுக்குத் திரும்பும் வழியில், இத்தாலியின் Pesaroவில் 1047ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ந்தேதி காலமானார். திருத்தந்தை இரண்டாம் கிளமென்டின் உடல், இத்தாலியிலிருந்து, Bamberg மறைமாவட்டத்திற்கே கொண்டுசெல்லப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. ஜெர்மனியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒரே திருத்தந்தை இவர் மட்டுமே.

எட்டே மாதங்களில் திருத்தந்தை இரண்டாம் கிளமென்ட் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீண்டும் திருஅவை தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற முனைந்தார் முன்னாள் திருத்தந்தை 9ம் பெனடிக்ட். 1047ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்பொறுப்பை பலவந்தமாக கைப்பற்றிய இத்திருத்தந்தை, எட்டு மாதங்கள் மீண்டும் திருத்தந்தையாக பதவி வகித்தார். இதற்கிடையே, 1048ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மனியின் Brixen ஆயர் Poppoவை திருத்தந்தையாக நியமித்தார் பேரரசர் ஹென்றி. முதலில் இப்பொறுப்பை ஏற்க மறுத்த ஆயர் Poppo, பேரரசரின் கட்டாயத்தின்பேரில் அரைமனதாக இசைவளித்தார். அவரும் உரோம் நகர் வந்து, ஜுலை மாதம் 17ம் தேதி இலாத்தரன் பெருங்கோவிலில் திருத்தந்தையாக பொறுப்பேற்று, இரண்டாம் தமாசுஸ் என்ற பெயரையும் எடுத்துக்கொண்டார். அதுவரை பேரரசரின் அனுமதியின்றி எட்டுமாதமாக ஆட்சிபுரிந்து வந்த முன்னாள் திருத்தந்தை 9ம் பெனடிக்ட் அவர்கள், அன்றிலிருந்து காணாமல்போனார். சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, இவர் உரோமுக்கு அருகேயுள்ள Grotta Ferrataவின் துறவுமடத்தில் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி அங்கேயே தன் இறுதி நாட்களை செலவிட்டார் என நம்பப்படுகிறது.

திருத்தந்தை இரண்டாம் கிளமெண்ட்டிற்குப் பின்னர் பேரரசரால் நியமிக்கப்பட்ட திருத்தந்தை இரண்டாம் தமாசுஸ், 1048ம் ஆண்டு, ஜுலைமாதம் 17ந்தேதி பதவியேற்றபோது, உரோம் நகருக்கு அப்போது கோடைகாலமாக இருந்தது. கோடை வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, உரோம் நகரிலிருந்து சிறிது தொலைவிலுள்ள Palestrina என்ற இடத்திற்கு ஓய்வெடுக்கச் சென்ற திருத்தந்தை இரண்டாம் தமாசுஸ், தான் பொறுப்பேற்ற 23 நாட்களில், மலேரியா நோய் தாக்கி காலமானார். ஜெர்மன் நாடு வழங்கிய இந்த மூன்றாவது திருத்தந்தைக்குப்பின், தலைமைப் பொறுப்பிற்கு வந்தார், திருத்தந்தை புனித ஒன்பதாம் லியோ. திருஅவையின் 109வது திருத்தந்தை புனித மூன்றாம் ஏட்ரியனுக்குப்பின் புனிதராக அறிவிக்கப்பட்ட திருஅவையின் 152வது திருத்தந்தை புனித ஒன்பதாம் லியோ குறித்து வரும் வாரம் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2021, 14:42