பருவநிலை மாற்ற அநீதிகளை எதிர்த்து பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
நவம்பர் மாதத்தில் இடம்பெற உள்ள பருவநிலை மாற்றம் பற்றிய ஐநாவின் ஆண்டு கூட்டத்திற்கு தயாரிப்பாக, போலந்திலிருந்து ஸ்காட்லாந்து நோக்கிய பயணம் ஒன்று, கிறிஸ்தவ சபைகளின் அங்கத்தினர்களால் துவக்கப்பட்டுள்ளது.
போலந்து கத்தோலிக்க ஆயர்களின் ஆதரவுடன் பல்வேறு கிறிஸ்தவ சபைகளால் துவக்கப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்குபெறும் 30 விசுவாசிகளும், 77 கட்டங்களாக 1450 கிலோமீட்டர்களைக் கடந்து, COP26 என்ற ஐ.நா. பருவநிலை உச்சிமாநாடு இடம்பெறும் ஸ்காட்லாந்தின் Glasgow சென்றடைவர்.
நவம்பர் மாதம் முதல் தேதி முதல் 12 வரை இடம்பெற உள்ள உச்சிமாநாட்டிற்கு இக்குழுவை அனுப்பியுள்ள கிறிஸ்தவ சபைகள், தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகளால், சுற்றுச்சுழல் அழிவின் வேகம் குறைந்துள்ளபோதிலும், உலகில் சுமுக நிலை திரும்பும்போது, வளங்கள் மிகையான அளவில் சுரண்டப்படுவதும், பல தாவரங்கள், மற்றும் விலங்குகளின் இன அழிவும், சுற்றுச்சூழல் அழிவும் இடம்பெற உள்ள அச்சத்தையும் வெளியிட்டுள்ளன.