தேடுதல்

புடபெஸ்ட் நகரில் நடைபெறும் அனைத்துலக திருநற்கருணை மாநாட்டின் இலச்சனை புடபெஸ்ட் நகரில் நடைபெறும் அனைத்துலக திருநற்கருணை மாநாட்டின் இலச்சனை 

ஆசிய நாடுகளை, ஹங்கேரியுடன் இணைக்கும் ஒரு பாலமாக...

52வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டின் ஒரு பகுதியாக, பிலிப்பீன்ஸ் நாட்டில் செப்டம்பர் 11ம் தேதி, தேசிய நற்கருணை மாநாடு, மெய்நிகர் வழியே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 5ம் தேதி முதல் 12ம் தேதி முடிய, ஹங்கேரி நாட்டின் புடபெஸ்ட் (Budapest) நகரில் நடைபெறும் 52வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டின் ஒரு பகுதியாக, பிலிப்பீன்ஸ் நாட்டில், செப்டம்பர் 11ம் தேதி, தேசிய நற்கருணை மாநாடு, மெய்நிகர் வழியே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11, சனிக்கிழமையன்று, தலைநகர் மணிலாவில் உள்ள திருச்சிலுவை ஆயலத்தில் நடைபெறும் இணையவழி மெய்நிகர் மாநாடு, ஆசிய நாடுகளை, ஹங்கேரி நாட்டுடன் இணைக்கும் ஒரு பாலமாக அமையும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் திருநற்கருணை மாநாடுகள் பணிக்குழுவின் செயலர் அருள்பணி மிகுவேல் கார்சியா (Miguel Garcia) அவர்கள் கூறினார்.

52வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டின் ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்ட வேளையில், மணிலாவிலிருந்து 500 பிரதிநிதிகள், புடபெஸ்ட் நகருக்கு நேரடியாகச் சென்று மாநாட்டில் கலந்துகொள்வதாக முதலில் திட்டமிடப்பட்டது என்றும், கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தால், தற்போது, இந்த மெய்நிகர் மாநாடு நடத்தப்படுகிறது என்றும், அருள்பணி கார்சியா அவர்கள் கூறினார்.

புடபெஸ்ட் நகரில் நடைபெறும் அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் திருநற்கருணை மாநாடுகள் பணிக்குழுவின் தலைவரும், Cebu உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான ஹோஸே பால்மா (José Palma) அவர்கள் நேரடியாகக் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு, பிலிப்பீன்ஸ் நாட்டின் Cebu உயர் மறைமாவட்டத்தில், 2016ம் ஆண்டு நடைபெற்ற வேளையில், அம்மாநாட்டில் 12,000த்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் உலகெங்கிலுமிருந்து பங்கேற்றனர் என்பதும், இறுதித் திருப்பலியில், பத்து இலட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

2020ம் ஆண்டு நடைபெறவேண்டியிருந்த 52வது திருநற்கருணை மாநாடு கோவிட் பெருந்தொற்று காரணமாக 2021ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது என்பதும், இம்மாநாட்டின் இறுதி நாள் திருப்பலியை, செப்டம்பர் 12ம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2021, 14:33