தேடுதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பில்... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பில்... 

உயிர்களையும், மனித உரிமைகளையும் காப்பது உடனடி தேவை

ஆயுத பயன்பாட்டின் வழியே ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்புடன், அறிவுசார்ந்த உரையாடலை மேற்கொள்ள, அனைத்துலக சமுதாயம், அனைத்து முயற்சிகளையும் செய்வதற்கு, Pax Christi விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களின், குறிப்பாக, அந்த சமுதாயத்தில் மிகவும் நலிவுற்று இருப்போரின் உயிர்களையும், அவர்களது மனித உரிமைகளையும் காப்பது உடனடியான தேவை என்று, அனைத்துலக Pax Christi அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்கள், கல்வி கற்கவும், பொதுவாழ்வில் ஈடுபடவும் உரிமை பெறுவதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள், மீண்டும் பறிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும், அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகள், அறவே அகற்றப்படும் ஆபத்து உள்ளது என்றும், Pax Christi அமைப்பு, தன் அறிக்கையின் துவக்கத்தில் கவலையை வெளியிட்டுள்ளது. 

ஆயுத பயன்பாட்டின் வழியே அந்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்புடன் அறிவுசார்ந்த உரையாடலை மேற்கொள்ள, அனைத்துலக சமுதாயம், தன்னால் இயன்ற அளவு, அனைத்து முயற்சிகளையும் செய்யுமாறு, Pax Christi அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

தாலிபான் அமைப்பில் உள்ள அனைவரும், தாங்கள் ஒவ்வொருவரும், மாண்பு நிறைந்த மனிதர்கள் என்பதை மனதில் கொண்டவர்களாய், பழிக்குப்பழி வாங்கும் மனநிலையிலிருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு, பாதுகாப்பையும், அமைதியையும் உறுதிசெய்யவேண்டும் என்று, Pax Christi அமைப்பு, இவ்வமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மனித உரிமைகளைக் காப்பது, மிகவும் நல்வியுற்ற மக்களை அந்நாட்டிலிருந்து வெளியே கொணர்வது ஆகிய கடமைகளை நிறைவேற்ற, ஐக்கிய நாட்டு நிறுவனத்துடன், உலகின் அனைத்து அரசுகளும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசும், உடனடியான செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று, Pax Christi அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்கள், அண்மைய நாடுகளில் குடியேறுவதற்குத் தேவையான வசதிகள், அந்நாடுகளில் குறையும் வேளையில், அந்நாடுகளுக்கு உதவுவது, அனைத்து நாடுகளின் கடமை என்பதையும், Pax Christi அமைப்பு, தன் அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில், தற்போது, அவசரமாகத் தேவைப்படும் உணவு, மற்றும் மருத்துவ உதவிகள், அனைவரையும் சென்றடைவதற்கு, பன்னாட்டுச் சமுதாயம், வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் Pax Christi அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2021, 14:02