நாகசாகி அறிக்கையில் கத்தோலிக்க துறவியின் சொற்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
Auschwitzன் புனிதர் என அறியப்படும் அருள்பணியாளர், புனித Maximilian Kolbe அவர்களின் பாதச்சுவடுகளை பின்பற்றி வாழ்ந்த ஜப்பான் கத்தோலிக்க துறவி Ozaki Toumeiன் அணு ஆயுத எதிர்ப்பு வார்த்தைகளைக் கொண்டு துவக்கி, தன் அமைதிச் செய்தியை வெளியிட்டுள்ளார், நாகசாகி மேயர் Tomihisa Taue.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 76வது ஆண்டு நினைவை, நாகசாகியின் அமைதி பூங்காவில் மக்களுடன் இணைந்து சிறப்பித்து, அமைதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட அந்நகர் மேயர் Taue அவர்கள், அவ்வணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்து, பின்னர் தன் 93ம் வயதில் உயிரிழந்த கத்தோலிக்கத் துறவி Ozaki அவர்களின் வார்த்தைகளை தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்கவில்லையெனில் உலகில் அமைதி நிலைக்காது எனவும், சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள் என பலரை இந்த அணு ஆயுதத்திற்கு பலி கொடுத்தவர்கள், மற்றும் இந்த கதிரியக்கத்தை அனுபவித்தவர்களைத் தவிர மற்றெவரும் இது தரும் திகிலை புரிந்துகொள்ள முடியாது எனவும், கத்தோலிக்க துறவி Ozaki அவர்கள் கூறியுள்ள சொற்களை, தன் அறிக்கையில், நாகசாகி மேயர், மேற்கோளாகக் பயன்படுத்தியுள்ளார்.
அணு ஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க துறவி Ozaki, தன் வாழ்நாள் முழுவதும் விடுத்துவந்த அழைப்பு, இன்னும் நிறைவேற்றப்படவில்லையெனினும், அது குறித்த சில ஒப்பந்தங்கள் இடம்பெற்றுள்ளன என தன் செய்தியில் கூறும் நாகாசாகி மேயர், அணுஆயுத தடை ஒப்பந்தம் இவ்வாண்டு சனவரியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, நல்ல துவக்கம் எனவும், அதில் தெரிவித்துள்ளார்.