தேடுதல்

  மியான்மார் நாட்டில் வெள்ளப்பெருக்கின் இடையே, கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரை எடுத்துச் செல்லும் மருத்துவக்குழு மியான்மார் நாட்டில் வெள்ளப்பெருக்கின் இடையே, கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரை எடுத்துச் செல்லும் மருத்துவக்குழு  

மியான்மாரில் பெருந்தொற்று முடிவுக்கு வர, இரு வார இறைவேண்டல்

கர்தினால் போ: இன்றைய கோவிட் இறப்புகள் அனைத்தும் வெறும் எண்ணிக்கை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கிறிஸ்தவ விசுவாசம், மற்றும் நம்பிக்கையிலிருந்து பலம் பெற்றவர்களாக, கத்தோலிக்கர் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ பிறரன்பின் பாதையில் நடைபோடவேண்டும் என அழைப்புவிடுத்தார், மியான்மாரின் கர்தினால் சார்லஸ் மாங் போ.
கோவிட் பெருந்தொற்றின் மூன்றாவது அலையால் பெருமளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் மியான்மார் நாட்டில், இத்தொற்றிற்குப் பலியான அருள்பணியாளர்கள், துறவறத்தார், மற்றும், பொதுநிலை விசுவாசிகளின் ஆன்மாக்கள் நிறையமைதியடைய திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால் போ அவர்கள், நேற்றுவரை நம்மோடு இருந்து, நம்மை அன்புகூர்ந்து, நம் சுகதுக்கங்களில் பங்கேற்ற இவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம் என அழைப்புவிடுத்தார்.
கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என அனைத்து மதத்தினரும் இறைவேண்டல் செய்யுமாறு, இரு வாரங்களை தேசிய செப வாரங்களாக அறிவித்துள்ள மியான்மார் கத்தோலிக்க ஆயர்களின் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் 6ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, இறந்தவர்களுக்கான திருப்பலியை நிறைவேற்றியபோது இதனைக் குறிப்பிட்டார், கர்தினால் போ.
பிப்ரவரி மாதம் முதல் தேதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, மியான்மாரில் எழுந்துள்ள அரசியல், சமூக, பொருளாதார, மனிதாபிமான, மற்றும் மனித உரிமை நெருக்கடிகளுடன், கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையும் இணைந்து, மக்களை பெருமளவில் வாட்டிவருவதாக, ஆழ்ந்த கவலையை வெளியிட்ட மியான்மார் ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் போ அவர்கள், இன்றைய கோவிட் இறப்புக்கள் அனைத்தும், வெறும் எண்ணிக்கை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது என உரைத்தார்.
பல்வேறு இடர்நிலைகளால், மியான்மார் நாட்டில் நண்பகல் வேளையிலேயே இருள் சுழ்ந்துள்ளது போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளது என்று கூறிய கர்தினால் போ அவர்கள், கிறிஸ்தவ விசுவாசம் மற்றும், நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபோடுவோம் என்ற அழைப்பை முன்வைத்தார்.
இதற்கிடையே, பல இலட்சக்கணக்கானோர் உணவுப் பற்றாக்குறையால் வாடும் மியான்மார் நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், 70 விழுக்காடு குறைவதாக, WFP உலக உணவு திட்ட அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.
அரசியல், சமூக, மற்றும், பொருளாதார பதட்ட நிலைகளைச் சந்தித்துவரும் மியான்மார் நாட்டில், கொரோனா தொற்றின் மூன்றாம் அலை, ஒரு சுனாமிபோல் தாக்கியுள்ளதாக அறிவித்த WFP அமைப்பின் மியான்மார் நாட்டு இயக்குனர் Stephen Anderson அவர்கள், மியான்மாரில் பசிக்கு எதிரான திட்டங்களுக்கு, அடுத்த 6 மாதங்களுக்கு 8 கோடியே 60 இலட்சம் டாலர்கள் தேவைப்படுவதாக அறிவித்தார்.
 

07 August 2021, 14:58