பெருந்தொற்று ஒழிய தேசிய அளவில் இறைவேண்டல்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
மியான்மாரில் கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை, மக்களின் நலவாழ்வில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்திவரும்வேளை, இப்பாதிப்புக்களிலிருந்து மக்கள் நலம்பெறுவதற்கு, தலத்திருஅவை ஏற்பாடு செய்துள்ள, நாடுதழுவிய இறைவேண்டலில் அனைவரும் பங்குகொள்ளுமாறு, அந்நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
மியான்மார் நாடு பெருந்தொற்றிலிருந்து குணம்பெறவேண்டும் என்பதற்காக, மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தங்கள் கரங்களையும், இதயங்களையும் எல்லாம்வல்ல இறைவனை நோக்கி உயர்த்தி மன்றாடுமாறு, மியான்மார் ஆயர்கள், ஆகஸ்ட் 02, இத்திங்களன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழியாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
மியான்மார் நாட்டின் இந்த இருளான நாள்களில், மக்கள் அனைவரும், ஒரே குழுமமாக இணைந்து, பரிவன்பு என்பதை, பொதுவான பண்பாகக்கொண்டு செயல்படுமாறு வலியுறுத்தியுள்ள ஆயர்கள், இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் பல்சமய இறைவேண்டலில் எல்லாரும் இணைந்து, தொடர்ந்து செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளனர்.
செபங்கள், திருநற்கருணை ஆராதனைகள், செபமாலை பக்திமுயற்சிகள் ஆகியவை, குடும்பங்களிலும், நிறுவனங்களிலும் தொடர்ந்து நடைபெற, சமயத் தலைவர்கள் மக்களை ஊக்குவிக்குமாறும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
மியான்மாரில் குணப்படுத்தல், அமைதி, மற்றும், ஒப்புரவைக் கொணர்வதற்கு அனைத்து மக்களின் மனங்களும் உருகுமாறு இறைவனை மன்றாடுவோம் எனவும், இப்போது நாட்டிற்குத் தேவை ஒற்றுமை மட்டுமே எனவும், போரும், புலம்பெயர்வும் வேண்டாம் எனவும், பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மட்டுமே இப்போது நாம் ஈடுபடவேண்டும் எனவும், மியான்மார் ஆயர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் ஆகஸ்ட் 7ல் செபம்
மேலும், உலகம் முழுவதும் பெருந்தொற்று ஒழியவேண்டுமென்று, இந்தியத் திருஅவை, ஆகஸ்ட் 07, வருகிற சனிக்கிழமை இரவில் இறைவேண்டல் செய்யவுள்ளது. (UCAN)