தேடுதல்

வட மற்றும் தென் கொரிய அரசுத்தலைவர்களின் சந்திப்பு - கோப்புப் படம் 2018 வட மற்றும் தென் கொரிய அரசுத்தலைவர்களின் சந்திப்பு - கோப்புப் படம் 2018 

ஆகஸ்ட் 15 – கொரியாவின் ஒருங்கிணைப்பிற்கு செபம்

ஆகஸ்ட் 15ம் தேதியை, வட மற்றும் தென் கொரிய நாடுகள், மீண்டும் ஒருங்கிணைந்து வாழும் நாளாக சிறப்பிக்க கொரிய திருஅவைகளின் தேசியக் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏனைய ஆண்டுகளைப்போலவே, இவ்வாண்டும் ஆகஸ்ட் 15ம் தேதியை, வட மற்றும் தென் கொரிய நாடுகள், மீண்டும் ஒருங்கிணைந்து வாழும் நாளாக சிறப்பிக்க கொரிய திருஅவைகளின் தேசியக் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, ஜப்பான் அரசின் ஆதிக்கத்திலிருந்து, கொரியா நாடு  விடுதலையடைந்ததையொட்டி, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 15ம் நாள், கொரிய தீபகற்பத்தின் ஒருங்கிணைப்பு நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஜப்பானின் ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலையடைந்தபின், 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை நடைபெற்ற கொரிய உள்நாட்டுப் போரையடுத்து, கொரிய நாடு, வட கொரியா, மற்றும் தென் கொரியா என்று இரு பகுதிகளாக, 1953ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி பிரிந்தது.

இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும், இவ்விரு நாடுகளும் ஒருங்கிணைவதற்கு, கிறிஸ்தவ சபைகள், ஆகஸ்ட் 15ம் தேதி கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாடுகளை நடத்திவருகின்றன.

1990களில் வட கொரியாவில் பட்டினி அதிகமாகப் பரவியிருந்த வேளையில், தென் கொரிய கிறிஸ்தவ சபைகள் அந்நாட்டிற்கு அதிக அளவில் உதவிகள் செய்தன.

அதைத்தொடர்ந்து, 1995ம் ஆண்டு, தென் கொரிய ஆயர் பேரவை, கொரிய நாடுகளின் ஒப்புரவு பணி என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, இவ்விரு நாடுகளின் ஒருங்கிணைப்பிற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2014ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆறாவது ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள தென் கொரியாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், வட மற்றும் தென் கொரிய நாடுகளின் ஒருங்கிணைப்பைக் குறித்து தன் உரைகளில் குறிப்பிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2021, 14:28