தேடுதல்

காபூல் அரசு அலுவலகத்திற்கு முன் ஆயுதம் ஏந்தி நிற்கும் தாலிபான் இளைஞர் காபூல் அரசு அலுவலகத்திற்கு முன் ஆயுதம் ஏந்தி நிற்கும் தாலிபான் இளைஞர் 

காபூலில் சிக்கியுள்ள இயேசு சபையினர், அருள்சகோதரிகள்

ஆப்கானிஸ்தான் தாலிபான் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட இவ்வேளையில், இயேசு சபையைச் சேர்ந்த இரு அருள்பணியாளர்களும், பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையைச் சேர்ந்த நான்கு அருள்சகோதரிகளும் இன்னும் வெளியேற இயலாமல் உள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட இவ்வேளையில், அந்நாட்டில், இயேசு சபையைச் சேர்ந்த இரு அருள்பணியாளர்களும், புனித அன்னை தெரேசாவால் உருவாக்கப்பட்ட பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையைச் சேர்ந்த நான்கு அருள்சகோதரிகளும் இன்னும் வெளியேற இயலாமல் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோர் பணிகளில் ஈடுபட்டுள்ள இயேசு சபையினரின் JRS அமைப்பில், கடந்த சில ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் அருள்பணி Jerome Sequeira அவர்களும், அருள்பணி Robert Rodrigues அவர்களும் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற இயலாமல் உள்ளனர் என்றும், அவர்களுக்காக செபிக்கும்படியும் இயேசு சபையினர் விண்ணப்பித்துள்ளனர்.

அதே வண்ணம், அந்நாட்டில் அடைபட்டுள்ள பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையைச் சேர்ந்த நான்கு அருள்சகோதரிகளையும் அங்கிருந்து வெளியில் கொணரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக UCA செய்தி கூறுகிறது.

2004ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பணியாற்றிவரும் பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையின் நான்கு அருள்சகோதரிகளில் ஒருவர் இந்தியர் என்றும், ஏனைய மூவரும் வேற்று நாட்டவர்கள் என்றும், ஏனைய விவரங்களை தற்போது தர இயலாது என்றும் இச்சபையின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் இரு இயேசு சபையினரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்றும், அவர்களை அந்நாட்டைவிட்டு வெளியே கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெற்கு ஆசிய இயேசு சபையினரின் தலைவர் அருள்பணி ஸ்டானி டி'சூசா அவர்கள் கூறியுள்ளார்.

1581ம் ஆண்டு பேரரசர் அக்பர் காபூலுக்குச் சென்ற வேளையில், தன்னுடன் இயேசு சபை அருள்பணியாளர் ஒருவரையும் அழைத்துச்சென்றார் என்றும், அதற்கு அடுத்த 1582ம் ஆண்டு, இயேசு சபை அருள்சகோதரர் Bento de Goes அவர்கள், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட வேளையில், காபூலில் ஒரு சில நாள்கள் தங்கினார் என்றும், வரலாற்று குறிப்புகள் உள்ளன.

2002ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் Barnabite அருள்பணியாளர்களிடம் ஆப்கானிஸ்தான் நாட்டின் மறைப்பணிகளை ஒப்படைத்ததையடுத்து, 2004ம் ஆண்டு முதல், இயேசு சபையினர் அந்நாட்டில் தங்கள் பணிகளைத் துவக்கினர். JRS அமைப்பின் வழியே, இயேசு சபையினர் மேற்கொண்ட பணிகளால், அந்நாட்டில் பெண் குழந்தைகள் உட்பட 25,000 குழந்தைகள் கல்வியறிவு பெற்றுவந்தனர்.

பெண்கள் கல்வி கற்பதை அறவே வெறுத்த தாலிபான் குழுவினர், அத்தகைய கல்விப்பணியில் இயேசு சபையினர் ஈடுபட்டதால், அந்நாட்டின் Sohadat கிராமத்தில் கல்விப்பணியாற்றி வந்த தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள், 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, அடையாளம் தெரியாத ஒரு குழுவால் கடத்தப்பட்டு, எட்டு மாதங்களுக்குப் பின், 2015ம் ஆண்டு, பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிகழ்வுக்குப் பின்னரும் தங்கள் கல்விப்பணியைத் தொடர்ந்துவந்த இயேசு சபையினர், தற்போது, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மிகக் கடினமானச் சூழலால், தங்கள் பணிகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2021, 14:45