தேடுதல்

Vatican News
தலைநகர் டில்லியில் தலித் மற்றும் பழங்குடியினரின் போராட்டம் - கோப்புப் படம் தலைநகர் டில்லியில் தலித் மற்றும் பழங்குடியினரின் போராட்டம் - கோப்புப் படம்  

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் போராட்டம் தொடரும்

இந்தியாவின் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாளெல்லாம் அருள்பணி ஸ்டான் அவர்கள் மேற்கொண்ட போராட்டம் இனியும் தொடரும் - அருள்பணி இருதய ஜோதி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்திய பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தையும், அவர்களது நில உரிமைகளையும் பாதுகாக்கும் போராட்டங்கள் தொடரும் என்று, பழங்குடியினர் உலக நாளான ஆகஸ்ட் 9ம் தேதி, இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உறுதிமொழி எடுக்கப்பட்டது என்று UCA செய்தி கூறுகிறது.

திரிபுரா மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள சேவியர் முன்னேற்ற கல்வி நிறுவனத்தில், அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுடன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்நிறுவனத்தின் இயக்குனர், அருள்பணி இருதய ஜோதி அவர்கள் பேசுகையில், பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டு உயிர் துறந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை நினைவுகூர்ந்தார்.

இந்தியாவின் பழங்குடியின மக்களின் “jal, jangal and jamin", அதாவது, 'நீர், காடு, மற்றும் நிலம்' ஆகிய மூன்று உரிமைகளுக்காகவும், தன் வாழ்நாளெல்லாம், அருள்பணி ஸ்டான் அவர்கள் உழைத்தார் என்றும், அவர் மேற்கொண்ட போராட்டம், இனியும் தொடரும் என்றும், அருள்பணி ஜோதி அவர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்திக் கூறினார்.

இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில், 8.6 விழுக்காட்டினர் பழங்குடியினத்தவர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் மிசோராம் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர் என்றும் UCA செய்திக்குறிப்பு கூறுகிறது.

உலகின் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் பழங்குடியினரின் எண்ணிக்கை, 47 கோடியே 60 இலட்சத்திற்கும் அதிகம் என்றும், இவர்கள், உலக மக்கள் தொகையில் 6.2 விழுக்காட்டினர் என்றும், ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

"ஒருவரையும் பின்னே விட்டுவிடாமல் இருக்க: பழங்குடியின மக்களும், புதிய சமுதாய ஒப்பந்தத்திற்கு அழைப்பும்" என்ற தலைப்பில், 2021ம் ஆண்டின் பழங்குடியினர் உலக நாளை ஐ.நா. நிறுவனம் ஆகஸ்ட் 9, இத்திங்களன்று சிறப்பித்தது. (UCAN)

11 August 2021, 14:37