தேடுதல்

2021 ஆகஸ்ட் 10ல் சிறப்பிக்கப்பட்ட கறுப்பு தினத்தின்போது 2021 ஆகஸ்ட் 10ல் சிறப்பிக்கப்பட்ட கறுப்பு தினத்தின்போது 

ஆகஸ்ட் 10 - இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட 'கறுப்பு நாள்'

இந்தியாவில் கிறிஸ்தவ தலித் மக்களும், இஸ்லாமியரும், தொடர்ந்து அடைந்துவரும் பாகுபாட்டு கொடுமைகளை எதிர்த்து, ஆகஸ்ட் 10, இச்செவ்வாயன்று 'கறுப்பு நாள்' கடைபிடிக்கப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கிறிஸ்தவ தலித் மக்களும், இஸ்லாமியரும், தொடர்ந்து அடைந்துவரும் பாகுபாட்டு கொடுமைகளை எதிர்த்து, ஆகஸ்ட் 10, இச்செவ்வாயன்று 'கறுப்பு நாள்' கடைபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் வாழும் தலித் மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசின் சலுகைகள் வழங்கப்பட்டு வந்த வேளையில், அந்த சலுகைகள், கிறிஸ்தவ தலித் மக்களுக்கு இல்லை என்பதை அறிவித்து, 1950ம் ஆண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி, சட்டமொன்று வெளியிடப்பட்டதையடுத்து, அந்நாளை, இந்திய கிறிஸ்தவர்கள், 'கறுப்பு நாள்' என்று கடைபிடிக்கின்றனர்.

இந்தியாவில், தாழ்த்தப்பட்டோருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், இட ஒதுக்கீடு, நிதி உதவி ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டு வரும் வேளையில், அவை, கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் மாறியவர்களுக்கு மறுக்கப்படுவது, சமத்துவத்திற்கும், மத உரிமைக்கும் எதிரான சட்டம் என்று, இந்திய ஆயர் பேரவையின், தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பணிகளுக்கு பொறுப்பான, அருள்பணி விஜய் குமார் நாயக் அவர்கள் UCA செய்தியிடம் கூறினார்.

இந்த சட்டத்தை எதிர்த்து, இந்திய தேசிய திருஅவைகளின் கூட்டமைப்பு, 2013ம் ஆண்டு ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்ததையடுத்து, அந்த வழக்கு, 2020ம் ஆண்டு, உச்சநீதி மன்றத்தால் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டாலும், கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து, அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை என்று, அருள்பணி நாயக் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்திய ஆயர் பேரவையின் தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பணி அலுவலகத்தால், ஆகஸ்ட் 10, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்யப்பட்ட 'கறுப்பு நாள்' போராட்டங்கள், கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டன என்று UCA செய்தி கூறுகிறது.

இந்தியாவின் மக்கள் தொகையில், 20 கொடியே 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் தலித் மக்கள் என்றும், இது, இந்திய மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கு என்றும், இவர்களில் இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களில், 60 விழுக்காட்டினர், தலித், மற்றும், பழங்குடியின மக்கள் என்றும், புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2021, 14:12