தேடுதல்

பேராயர் Mark Coleridge பேராயர் Mark Coleridge  

20 ஆயிரம் ஆப்கான் புலம்பெயர்ந்தோரை ஆஸ்திரேலியா வரவேற்க...

கடந்த 10 ஆண்டுகளில், ஆப்கான் மக்களுள் எட்டாயிரத்திற்கு மேற்பட்டோருக்கும், தற்போது மூவாயிரம் பேருக்கும், ஆஸ்திரேலியா புகலிடம் அளித்துள்ளது, எனினும், இந்த உதவிக்கரம் அதிகரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறும் மக்களுள் குறைந்தது இருபதாயிரம் பேருக்கு மனிதாபிமான முறையில் அடைக்கலம் அளிக்குமாறு, ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர்  Mark Coleridge அவர்கள், ஆஸ்திரேலிய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 20, இவ்வெள்ளியன்று, ஆஸ்திரேலியப் பிரதமர் Scott Morrison அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பியுள்ள பேராயர் Coleridge அவர்கள், ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததிலிருந்து, அந்நாட்டு மக்கள் மீது பன்னாட்டளவில் அக்கறை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  

கடந்த பத்தாண்டுகளில், ஆப்கான் மக்களுள் எட்டாயிரத்திற்கு மேற்பட்டோருக்கும், தற்போது மூவாயிரம் பேருக்கும், ஆஸ்திரேலியா புகலிடம் அளித்துள்ளது, எனினும், இந்த உதவிக்கரம் அதிகரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று, பேராயரின் மடல் கூறுகிறது.

ஆப்கான் மக்களை ஏற்பது குறித்து, முக்கிய மனிதாபிமான அமைப்புகளும், மற்ற நாடுகளும் உறுதியளித்துள்ளதன் அடிப்படையில்,  ஆஸ்திரேலியா, இன்னும் கூடுதலாக, 17,000 பேருக்கு இடமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பேராயர் Coleridge அவர்கள், அரசின் இந்நடவடிக்கைக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆதரவாகச் செயல்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்படும் ஆப்கானியர்கள்
காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்படும் ஆப்கானியர்கள்

ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படையினரை தன் மடலில் சிறப்பாக குறிப்பிட்டுள்ள பேராயர் Coleridge அவர்கள், அப்பணியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் அளவுக்கு, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உதவிய ஆப்கான் மக்களை நன்றியோடு நினைவுகூர்ந்துள்ளார்.

இதற்கிடையே, காபூல் விமானநிலையத்தை தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால், பாதுகாப்புப் படையினர், மக்களை வெளியேற்றுவதற்கு கஷ்டப்படுகின்றனர் எனவும், இன்னல்களுக்கு மத்தியில், அந்நாட்டிலிருந்து 162 ஆஸ்திரேலியர் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், ஆஸ்திரேலியப் பிரதமர் Morrison அவர்கள் கூறியுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2021, 14:39