தேடுதல்

ஹெய்ட்டியில் மீட்புப் பணிகள் ஹெய்ட்டியில் மீட்புப் பணிகள் 

ஹெய்ட்டிக்கு கத்தோலிக்க அமைப்பின் ஐந்து இலட்சம் யூரோ

மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடைய, ஆயுதம் தாங்கிய குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என விண்ணப்பிக்கும் தலத்திருஅவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாட்டில் மனிதாபிமான உதவிகள் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைய உதவும் வகையில், ஆயுதம் தாங்கிய குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என விண்ணப்பித்துள்ளது அந்நாட்டின் Port-au-Prince உயர் மறைமாவட்டம்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன், செபத்துடன் கூடிய நெருக்கத்தையும், அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ள தலத்திருஅவை, அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டை அறிவித்து செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்துள்ளது.

ஹெய்ட்டி நாட்டின் தலைநகர் Port-au-Princeன் பேராயர் Max Leroy Mésidor அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயதம் தாங்கிய குழுக்கள் தங்கள் ஆயுதங்களை கைவிடுவதற்கும், அரசின் அவசரகால உதவிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி காலை ஹெய்ட்டியை தாக்கிய நிலநடுக்கத்தால் இதுவரை இரண்டு அருள்பணியாளர்கள் உட்பட 1419 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர் என்றும், அந்நாட்டு கர்தினால் Chibly Langlois அவர்கள் உட்பட 5700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ACN எனப்படும் 'தேவையிலிருக்கும் திருஅவைகளுக்கான உதவி' என்ற பாப்பிறை உதவி அமைப்பு, ஹெய்ட்டியின் நிவாரணப்பணிகளுக்கென ஐந்து இலட்சம் யூரோக்களை வழங்க முன்வந்துள்ளது.

மேலும், உலகின் பல திருஅவைகள், குறிப்பாக, இலத்தீன் அமெரிக்க திருஅவைகளும், காரித்தாஸ் அமைப்பும் உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

17 August 2021, 14:35