தேடுதல்

ஹெய்ட்டியின் தென்மேற்கிலுள்ள Les Cayes நகரில் சேதமடைந்துள்ள கோவில் ஹெய்ட்டியின் தென்மேற்கிலுள்ள Les Cayes நகரில் சேதமடைந்துள்ள கோவில் 

ஹெயிட்டியுடன் ஒருமைப்பாட்டிற்கு திருஅவையின் அழைப்பு

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் கீழ் இயங்கும் CRS எனும் கத்தோலிக்க துயர்துடைப்பு அமைப்பு, தன் பணிகளை ஹெய்ட்டியில் தீவிரப்படுத்தியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாட்டு மக்களோடு தங்கள் ஒருமைப்பாட்டை அறிவித்து, ஆன்மீக, மற்றும் பொருளுதவிகளை, அமெரிக்க ஐக்கிய நாட்டு திருஅவை வழங்குவதாக, இஞ்ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் José Gomez.

இயற்கை இடர்பாடுகளால் பெரும் துயரடைந்துள்ள ஹெய்ட்டி மக்களுக்கு உதவிவரும் பிறரன்பு அமைப்புகளுக்கும், சுயவிருப்பப்பணியாளர்களுக்கும் நன்றியுரைப்பதாக தெரிவித்த பேராயர் கோமஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் கீழ் இயங்கும் CRS எனும் கத்தோலிக்க துயர்துடைப்பு அமைப்பும் தன் பணிகளை ஹெய்ட்டியில் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஹெய்ட்டியின் தென்மேற்கிலுள்ள Les Cayes நகரும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளும், வடமேற்கிலுள்ள Jeremie நகரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Jeremie மறைமாவட்ட ஆயர் Gontrand Décoste அவர்கள், மறைமாவட்டப் பேராலயம் உட்பட பல கோவில்கள், பங்குத்தளங்கள், துறவு இல்லங்கள் மற்றும் மக்களின் குடியிருப்புக்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Jeremie மறைமாவட்டத்தின் 55 பங்குதளங்களும் இந்நில நடுக்கத்தால் பாதிப்படைந்துள்ளதாகவும், கல்வி நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கும் ஆயர் Décoste அவர்கள், ஹெய்ட்டி மக்களுடன் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி அழைப்புவிடுத்துவரும் வத்திக்கான் வானொலிக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.

ஞாயிறு இரவு வரை வெளியான செய்திகளின்படி, இந்நிலநடுக்கத்தால் இதுவரை 1297 பேர் இறந்துள்ளனர், மற்றும், 5700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பல ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கிய 2010ம் ஆண்டின் நிலநடுக்க பாதிப்புகளிலிருந்து வெளிவரமுடியாமல் துயருறும் ஹெயிட்டியில், கொரோனா பெருந்தொற்றும், கடந்த மாதம் 7ம் தேதி, நிகழ்ந்த அரசுத்தலைவர் Jovenel Moise அவர்களின் கொலையும், மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.

சனிக்கிழமை காலை ஹெய்ட்டியில் இருமுறை இடம்பெற்றுள்ள நிலநடுக்கங்களின் பாதிப்புக்களை இன்னும் கணக்கிடமுடியாமல் அதிகாரிகள் திணறிவருகின்றனர்.

16 August 2021, 14:06