தேடுதல்

பாலஸ்தீனாவின் காசா பகுதி பாலஸ்தீனாவின் காசா பகுதி  

காசாவில் நீடித்த நிலையான அமைதிக்கு ஏங்கும் மக்கள்

இஸ்ரேல் அரசு, காசாவுக்கு 12 ஆண்டுகளாக விதித்திருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டிருப்பது, அம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையை அகற்றும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாலஸ்தீனாவின் காசா பகுதி மக்கள், நிலையான அமைதி, மற்றும், நீதியைக் காணும்வரை, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் எவ்வழியில் கிடைத்தாலும், நம்பிக்கை ஒருபோதும் ஏற்படாது என்று, காசா பங்குத்தந்தை அருள்பணி கபிரியேல் ரோமாநெல்லி (Gabriel Romanelli) அவர்கள் கூறினார்.

கத்தார் நாடு, காசாவில் துன்புறும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வழங்கும் மனிதாபிமான உதவிகளை விநியோகம் செய்வதற்கு, இஸ்ரேல் அரசு, "புதிய செயல்முறை" ஒன்றை அறிவித்துள்ளதையொட்டி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த அருள்பணி ரோமாநெல்லி அவர்கள், இவ்வாறு கூறினார்.  

கத்தார் நாட்டோடு இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தினால், காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கும் என்றும், இந்த மக்கள், இஸ்ரேலின் தடுப்புச் சுவராலும், ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஆயுதத் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என்றும், அருள்பணி ரோமாநெல்லி அவர்கள் கூறினார்.

காசாவுக்குச் செல்லவேண்டிய நிதியுதவியை இஸ்ரேல் அரசு முடக்கி வைத்திருந்ததால், அப்பகுதியில் வேலைவாய்ப்பின்மை, ஏறத்தாழ 50 விழுக்காடாக உள்ளது என்றும், இதற்குமுன், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக காசாவுக்கு ஏறத்தாழ 3 கோடி டாலர்கள் வழங்கப்பட்டன என்றும், அருள்பணி ரோமாநெல்லி அவர்கள், மேலும் கூறினார்.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மிகவும் மோசமாக உள்ளது என்றும், இஸ்ரேல் அரசு, காசாவுக்கு 12 ஆண்டுகளாக விதித்திருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டிருப்பது, அம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையை அகற்றும் என்றும் உரைத்த அருள்பணி ரோமாநெல்லி அவர்கள், காசாவில் நீடித்த நிலையான அமைதியும் நீதியும் கிடைக்கும்வரை, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற மதத்தினருக்கும் ஒருபோதும் நம்பிக்கை ஏற்படாது என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2021, 15:36