தேடுதல்

லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பயணிகளின் பவனி லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பயணிகளின் பவனி 

லூர்து நகர் திருத்தலத்தில், பிரான்ஸ் மக்களின் திருப்பயணம்

"உடன்பிறந்த நிலைக்கு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் திருப்பயணத்தில், பிரான்ஸ் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்கின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 13 இவ்வெள்ளி முதல், 16 வருகிற திங்கள் முடிய, பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், பிரான்ஸ் நாட்டு மக்கள் ஒன்றிணைந்து, தேசிய திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

"உடன்பிறந்த நிலைக்கு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த திருப்பயணத்தில், பிரான்ஸ் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர், கோவிட் பெருந்தொற்று விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கலந்துகொள்கின்றனர்.

முன்பு ஒருமுறை, மசபியேல் (Massabielle) குகையிலிருந்து, கன்னி மரியா, இறைவேண்டலுக்கும், உடலை கட்டுப்படுத்தும் தவமுயற்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததுபோல், இன்று, இந்தப் பெருந்தொற்றிலிருந்து, உலகினர் அனைவரையும் காப்பதற்கு, நம்மை மீண்டும் அழைக்கிறார் என்று, இந்த தேசிய திருப்பயணத்தை ஒருங்கிணைக்கும் அருள்பணி Vincent Cabanac அவர்கள் கூறியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக லூர்து நகரின் அன்னை மரியாவின் திருத்தலம் எப்போதும் விளங்குகிறது என்பதால், "உடன்பிறந்த நிலைக்கு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற கருத்துடன் இவ்வாண்டின் திருப்பயணம் இங்கு நடைபெறுவது பொருத்தமாக உள்ளது என்று இத்திருத்தலத்தின் அதிபரான அருள்பணி Olivier Ribadeau-Dumas அவர்கள் கூறினார்.

உடன்பிறந்த உணர்வின் எடுத்துக்காட்டாக வாழ்ந்ததால், ஆகஸ்ட் 9 இத்திங்களன்று கொலையுண்ட Montfort சபையின் மாநிலத் தலைவர் அருள்பணி Olivier Maire அவர்களின் நினைவு, இத்திருப்பயணத்திற்கு கூடுதல் பொருள் தருகிறது என்று, அருள்பணி Ribadeau-Dumas அவர்கள் எடுத்துரைத்தார்.

1872ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, உலகெங்கிலுமிருந்து திருப்பயணிகளை ஈர்த்து வந்த லூர்து நகர் அன்னை மரியாவின் திருத்தலம், கடந்த இரு ஆண்டுகள், கோவிட் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகளால் திருப்பயணிகளை வரவேற்க இயலாமல் போனது என்பதை குறிப்பிட்ட அருள்பணி Ribadeau-Dumas அவர்கள், தற்போது மீண்டும் பிரான்ஸ் மக்கள் உடன்பிறந்த உணர்வை வளர்க்க இத்திருத்தலத்திற்கு வருகை தருவது மகிழ்வைத் தருகிறது என்று கூறினார்.

13 August 2021, 14:34