தேடுதல்

புனித தோமினிக் புனித தோமினிக்  

புனித தோமினிக், பிரிவினைகளைக் களையும் வழிகளை கற்றுத்தருகிறார்

புனித தோமினிக், இத்தாலியின் பொலோஞ்ஞா நகரில், 1221ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இறைபதம் அடைந்தார். இதன் 800ம் ஆண்டின் நினைவாக, தொமினிக்கன் சபையினர், ஆகஸ்ட் 6, இவ்வெள்ளியன்று யூபிலி ஆண்டைத் துவக்கியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மறையுரையாளர்கள் சபையை நிறுவிய புனித தோமினிக் அவர்கள், பிரிவினைகளை மேற்கொள்ளும் வழிகளை கத்தோலிக்கருக்கு கற்றுத்தருகிறார் என்று, அச்சபையின் இப்போதைய உலகளாவிய தலைவர் அருள்பணி Gerard Francisco Parco Timoner III அவர்கள் கூறினார்.

புனித தோமினிக், இறைபதம் அடைந்ததன் 800ம் யூபிலி ஆண்டை, ஆகஸ்ட் 6, இவ்வெள்ளியன்று துவக்கிவைத்துப் பேசிய, அருள்பணி Timoner அவர்கள், கிறிஸ்துவின் உடலாகிய திருஅவை, இக்காலத்தில், பிரிவினை மற்றும், இணக்கமின்மை ஆகியவற்றால் காயமுற்றுள்ளதைப் பார்க்கமுடிகின்றது என்று எடுத்துரைத்தார்.

புனித தோமினிக்கின் 87வது வழித்தோன்றலாக, 2019ம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்பணி Timoner அவர்கள், தாங்கள் கத்தோலிக்கர் இல்லை என்பதுபோல், சிலர், திருத்தந்தை, மற்றும், திருஅவைக்கு எதிராக, சிலநேரங்களில், எழுதுவதை வாசிக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது என்று கூறினார். 

திருஅவை, கிறிஸ்துவின் உடலாக இருப்பதால், பிளவுகள் மற்றும், பிணக்குகளால், கிறிஸ்துவின் உடலும் காயமுறுகின்றது என்றுரைத்த அருள்பணி Timoner அவர்கள், தொமினிக்கன் சபையின் நிர்வாக அமைப்புமுறை, மற்றும், அப்புனிதர் திருஅவைக்கு வழங்கியுள்ள கொடைகள் பற்றி எடுத்துரைத்தார்.

இந்த அமைப்புமுறை, கூட்டு ஒருங்கியக்கம் என்று, இந்த .யூபிலி ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது உலகளாவிய சபைக்கு அனுப்பிய மடலில் பாராட்டி எழுதியுள்ளார் எனவும், அருள்பணி Timoner அவர்கள் கூறினார்.

புனித தோமினிக் அவர்கள், இத்தாலியின் பொலோஞ்ஞா நகரில், 1221ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இறையடி சேர்ந்தார். இதன் 800ம் ஆண்டின் நினைவாக, தொமினிக்கன் சபையினர், ஆகஸ்ட் 6, இவ்வெள்ளியன்று யூபிலி ஆண்டைத் துவக்கியுள்ளனர். இந்த யூபிலி ஆண்டு, 2022ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி நிறைவடையும். (CNA)

07 August 2021, 14:42