தேடுதல்

இலங்கையில் கோவிட்-19ஆல் இறந்தவரை எடுத்துச்செல்கின்றனர்  இலங்கையில் கோவிட்-19ஆல் இறந்தவரை எடுத்துச்செல்கின்றனர்  

இலங்கையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வலியுறுத்தல்

இலங்கையின் மருத்துவமனைகள் அனைத்தும் பெருந்தொற்று நோயாளிகளால் நிரம்பி வழியும்வேளை, பெருந்தொற்றால் தாக்கப்பட்ட நோயாளிகள், இன்னும் சில வாரங்களில் தெருக்களிலே இறக்கவேண்டிய சூழல் உருவாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் அதிகமாகிவரும்வேளை, அந்நோய் வெகு வேகமாகப் பரவுவதைத் தடைசெய்யும் நோக்கத்தில், அந்நாட்டில், ஒன்று அல்லது இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவிக்கவேண்டும் என்று, கத்தோலிக்கர் உட்பட பல்வேறு குழுவினர், அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

கத்தோலிக்க அருள்பணியாளர்கள், புத்தமத துறவிகள், வர்த்தகக் கழகத்தினர், நலவாழ்வு வல்லுனர்கள் போன்ற அனைவரும் இணைந்து, இலங்கை அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷா மற்றும், பிரதமர் மகிந்த இராஜபக்ஷா ஆகிய இருவருக்கும் எழுதியுள்ள விண்ணப்ப மடலில், பெருந்தொற்று கொடூரம், மேலும் அதிகரிப்பதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் மருத்துவமனைகள் அனைத்தும் பெருந்தொற்று நோயாளிகளால் நிரம்பி வழியும் வேளை, பெருந்தொற்றால் தாக்கப்பட்ட நோயாளிகள், இன்னும் சில வாரங்களில் தெருக்களிலே இறக்கவேண்டிய சூழல் உருவாகும் என்று, அனைத்து சிலோன் மருத்துவர்கள் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீர்கொழும்புவின் குரானா புனித அன்னா ஆலயப் பங்கின் அருள்பணியாளர் Cyril Gamini Fernando அவர்கள் கூறுகையில், மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து அரசு உணர்வதில்லை, மற்றும், கொரோனா பெருந்தொற்றின் கொடூரம்பற்றி வல்லுனர்கள் கூறுவதற்கும், அரசு செவிசாய்ப்பதில்லை என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் பேரிடர் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது என்றுரைத்துள்ள புத்தமத துறவி Thibbatuwawe Sri Siddhartha Sumangala Thera அவர்கள், நாடு முழுவதும், குறைந்தது, சில வாரங்களுக்காவது ஊரடங்கை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2021, 15:27