தேடுதல்

Vatican News
2021.08.06 preghiera 2021.08.06 preghiera 

உலகம் நலம்பெற இந்தியா கரம் குவிக்கிறது

ஆகஸ்ட் 07, இச்சனிக்கிழமை, இந்திய நேரம் இரவு 8.30 மணி முதல், 9.30 மணி வரை, தேசிய அளவில், ஒரு மணி நேரம், உலகம் பெருந்தொற்றிலிருந்து நலமடைய இறைவேண்டல் நடைபெறும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து நலம்பெற வேண்டி, இந்தியா கரம் குவிக்கிறது என்ற தலைப்பில், ஆகஸ்ட் 07, இச்சனிக்கிழமை இந்திய நேரம் இரவு 8.30 மணிக்கு இந்தியா எங்கும் இறைவேண்டல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை ஏற்பாடு செய்துள்ள தேசிய இறைவேண்டல் நாள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த ஆன்மாக்கள் நிறையமைதி அடையவும், அவர்களின் இழப்பால் வருந்தும் குடும்பங்கள், மற்றும், குழுமங்களுடன் தோழமையை வெளிப்படுத்தவும், உலகின் நலவாழ்வுக்காகவும், இந்நாளில் வேண்டுதல்கள் எழுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இச்சனிக்கிழமை, இந்திய நேரம் இரவு 8.30 மணி முதல், 9.30 மணி வரை, தேசிய அளவில், ஒரு மணி நேரம் இறைவேண்டல் நடைபெறும் எனக் கூறியுள்ள CCBI ஆயர் பேரவை, அந்நேரத்தில், வேறு எந்த நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யவேண்டாம் என, அனைத்து மறைமாவட்டங்கள், துறவு சபைகள், பக்த சபைகள், மற்றும், கத்தோலிக்க இயக்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

புனித தோமையார், புனித பிரான்சிஸ் சேவியர், புனித அன்னை தெரேசா ஆகியோரின் கல்லறைகளிலும், பாண்ட்ரா (மும்பை), சர்தானா (மீரட்), சிவாஜி நகர் (பெங்களூரு), வேளாங்கன்னி (தமிழகம்) ஆகிய நகரங்களிலுள்ள அன்னை மரியா பசிலிக்காக்களிலும், ஒரு மணி நேர இறைவேண்டல் நடைபெறும்.

திருநற்கருணை ஆசீரோடு நிறைவடையும் இந்த இறைவேண்டல், மாதா, ஷலோம், குட்னெஸ், பிரார்த்தனா பவன், தியாவானி, போன்ற கத்தோலிக்கத் தொலைக்காட்சிகள், முக்கிய கத்தோலிக்க யூடியூப் வலைக்காட்சிகள் ஆகியவை வழியாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த இறைவேண்டல் நிகழ்வில் அனைவரும், குறிப்பாக, குடும்பங்களும், துறவு சபை குழுமங்களும் கலந்துகொள்ளுமாறும், வெளிநாடுகளில் வாழ்கின்ற தங்களின் உறுப்பினர்களும் இதில் இணையத் தூண்டுமாறும், CCBI ஆயர் பேரவை அழைப்புவிடுத்துள்ளது. (Ind.Sec/Tamil)

இந்தியா கரம் குவிக்கிறது
இந்தியா கரம் குவிக்கிறது
06 August 2021, 15:12