தேடுதல்

Vatican News
"காலநிலை மாற்றத்தைத் தணிக்க நீ தேவை" விளம்பரம் "காலநிலை மாற்றத்தைத் தணிக்க நீ தேவை" விளம்பரம்  

கிளாஸ்கோ உச்சி மாநாட்டையொட்டி ‘காலநிலை ஞாயிறு’

COP26 உச்சி மாநாடு துவக்கப்படுவதற்குமுன், ஏதாவது ஒரு ஞாயிறைத் தெரிவுசெய்து, அந்நாளில் இறைவேண்டல், சிந்தனை, காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுமாறு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில், காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் COP26 உலக உச்சி மாநாட்டிற்காக, பிரித்தானியா, மற்றும், அயர்லாந்து நாடுகளின் கிறிஸ்தவர்கள், காலநிலை ஞாயிறு என்ற தலைப்பில், இறைவேண்டல் மற்றும், தியானங்களை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இவ்வாண்டு அக்டோபர் 31ம் தேதியிலிருந்து, நவம்பர் 12ம் தேதி வரை, ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள, காலநிலை மாற்றம் பற்றிய 26வது உச்சிமாநாடு, நல்ல பலன்களைத் தரவேண்டுமென்று இறைவனை மன்றாடுவதற்கென்று, இந்த மாநாடு துவங்குவதற்குமுன், ஏதாவது ஒரு ஞாயிறைத் தெரிவுசெய்து, அந்நாளில் இறைவேண்டல், சிந்தனை, காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுமாறு கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில், "காலநிலை ஞாயிறு" கொண்டாடப்படுமாறு, பிரித்தானியா மற்றும், அயர்லாந்து கிறிஸ்தவ சபைகள் அமைப்பின் ஆதரவோடு, சுற்றுச்சூழல் விவகார கூட்டமைப்பு (EIN),  கடந்த 2020ம் ஆண்டில் காலநிலை ஞாயிறு என்ற ஓர் இறைவேண்டல் நடவடிக்கையைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, 2021ம் ஆண்டிலும், காலநிலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகின்றது.

காலநிலை ஞாயிறு நடவடிக்கையில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து ஆகிய பகுதிகளின் 1,500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகள் இணைந்துள்ளன. இங்கிலாந்து மற்றும், வேல்ஸ் ஆயர் பேரவையின் பிறரன்பு CAFOD அமைப்பும், இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அக்டோபர் 4ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் “படைப்பின் காலம்” என்ற திருவழிபாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, காலநிலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

06 August 2021, 15:17