தேடுதல்

கருணைக்கொலை குறித்த சட்டத்தை எதிர்த்து இஸ்பெயின் நாட்டில் போராட்டம் கருணைக்கொலை குறித்த சட்டத்தை எதிர்த்து இஸ்பெயின் நாட்டில் போராட்டம் 

தீரா நோயுடையோருடன் பணிபுரிவோர் கருணைக்கொலையை ஆதரிப்பதில்லை

கருணைக்கொலைக்கும், தற்கொலைக்கும் உதவிபுரிவதற்கு அனுமதி வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது மருத்துவர் மற்றும் நோயாளிகளிடையே நிலவும் உறவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருணைக்கொலை மற்றும் தற்கொலைகளில் உதவிபுரிவது குறித்த பிரிட்டன் சட்டங்களில் மாற்றம் கொணர்வதைப்பற்றி விவாதிக்க பிரிட்டன் மருத்துவக் கழகம் முன்வந்திருப்பதற்கு, கிறிஸ்தவ மருத்துவர்களின் கூட்டமைப்பு, தன் வரவேற்பை வெளியிட்டுள்ளது.

வருங்காலத்தில் சட்டப் பரிந்துரைகள் இடம்பெறும்போது, கருணைக்கொலை, மற்றும் தற்கொலைக்கு உதவுதல் ஆகிய விடயங்களில் நல்ல முடிவுகளை எடுக்கும் வண்ணம் பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனைகள் இருக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ள கிறிஸ்தவ மருத்துவர்கள் கூட்டமைப்பு, இத்தகைய மருத்துவச் சட்டங்களை மாற்றுவதில், சிக்கல்கள் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

முதியோர், மற்றும் குணப்படுத்தப்படமுடியாத நோயுடன் வாழ்வோருடன் பணிபுரியும் மருத்துவர்கள், கருணைக்கொலையையும் தற்கொலைக்கு வழங்கப்படும் உதவிகளையும் தீவிரமாக எதிர்க்கும் வேளையில், இவர்களுடன் பணிபுரியாத ஓய்வுபெற்ற மருத்துவர்களும், மருத்துவம் பயிலும் மாணவர்களும், இதனை ஆதரிக்கின்றனர் என்பதையும், பிரிட்டன் மருத்துவக் கழகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது, கிறிஸ்தவ மருத்துவர்கள் குழு.

கருணைக்கொலைக்கும், தற்கொலைக்கும் உதவி புரிவதற்கு அனுமதி வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது மருத்துவர் மற்றும் நோயாளிகளிடையே நிலவும் உறவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது, பிரிட்டனின்  கிறிஸ்தவ மருத்துவர்கள் குழு.

2016ல் கனடாவில் அமலுக்கு வந்த கருணைக்கொலை, மற்றும் தற்கொலை உதவிகள் சட்டத்தினால், தற்கொலைகள் எண்ணிக்கை அதிகரித்ததையும், தாங்கள் தனிமையில் இருக்கிறோம் என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, தற்கொலைக்கு உதவிகேட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 1412 என்பதையும் எடுத்துரைத்துள்ளது, கிறிஸ்தவ மருத்துவர்களின் குழு.

1949ம் ஆண்டு துவக்கப்பட்ட CMF எனும் கிறிஸ்தவ மருத்துவ குழுவில், பிரிட்டனின் 4500 மருத்துவர்கள், தாதியர், மற்றும் செவிலியர் அங்கத்தினர்களாக உள்ளனர்.

14 August 2021, 15:24