தேடுதல்

இஸ்பெயின் வந்துள் ஆப்கான் புலம்பெயர்ந்தோர் இஸ்பெயின் வந்துள் ஆப்கான் புலம்பெயர்ந்தோர்  

பாகிஸ்தான் காரித்தாஸ், ஆப்கான் புலம்பெயர்ந்தோருக்கு உதவத் தயார்

பாகிஸ்தானில் ஏற்கனவே 15 இலட்சம் ஆப்கான் புலம்பெயர்ந்தோர் உள்ளனர். இப்போதைய புலம்பெயர்வு, அவ்வெண்ணிக்கையை கூடுதலாக்கியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயுள்ள எல்லைப் பகுதியைக் கடக்கும் ஆப்கான் மக்களின் எண்ணிக்கை, அண்மை நாள்களில் இருமடங்காகியுள்ளவேளை, ஆப்கான் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் வழிகள் குறித்து சிந்தித்து வருவதாக, பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Amjad Gulzar அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார். 

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த இருபது ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவம், ஆகஸ்ட் 31, இச்செவ்வாயன்று, அந்நாட்டை விட்டு முழுவதுமாக வெளியேறியுள்ளதையடுத்து, தாலிபான்கள், காபூல் விமான நிலையத்தை, தங்களின் முழுகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கான் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, மேலும் ஐந்து இலட்சமாக அதிகரிக்கும் என்று, ஐ.நா. நிறுவனம் எதிர்பார்க்கின்றது என்று கூறியுள்ள Gulzar அவர்கள், எல்லையில் இரு பாகிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், பாகிஸ்தான் அரசின் வழிகாட்டுதலின்படி, ஆப்கான் புலம்பெயர்ந்தோருக்கு, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு உதவுவதற்குத் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடு, தன் எல்லைகளை, ஆகஸ்ட் 21ம் தேதி மீண்டும் திறந்துள்ளவேளை, அன்றிலிருந்து, மக்களின் புலம்பெயர்வு, இதற்குமுன் இல்லாத அளவுக்கு இடம்பெற்று வருகிறது என்று, பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, ஏறத்தாழ 15 இலட்சம் ஆப்கான் புலம்பெயர்ந்தோர் ஏற்கனவே அந்நாட்டில் உள்ளனர். இப்போதைய புலம்பெயர்வு அவ்வெண்ணிக்கையை கூடுதலாக்கியுள்ளது. (AsiaNews)

31 August 2021, 15:12