தேடுதல்

பாகிஸ்தான் காரித்தாஸ் பாகிஸ்தான் காரித்தாஸ்  

ஆப்கான் மக்களுக்கு பாகிஸ்தான் காரித்தாஸ் உதவி

UNHCR அமைப்பின் கணிப்புப்படி, பாகிஸ்தானில் ஏற்கனவே 14 இலட்சம் ஆப்கான் புலம்பெயர்ந்தோர் வாழ்ந்து வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தானில், தாலிபான் இஸ்லாமிய குழு, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டைவிட்டு வெளியேறும் மக்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருக்குமாறு, பாகிஸ்தான் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டிலுள்ள தன் கிளை அமைப்புக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை ஆற்றுவதற்கு, அந்நாட்டு எல்லையிலுள்ள பாகிஸ்தான் மறைமாவட்டங்களில் செயல்படும் காரித்தாஸ் அமைப்புக்கள், எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறும், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியிலுள்ள Chaman என்ற இடத்திலிருந்தே, இவ்விரு நாடுகளுக்கும் மிக முக்கிய வர்த்தக, மற்றும், பயணப் போக்குவரத்துக்கள் இடம்பெற்றுவந்தவேளை, அப்பகுதி வழியாக, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள், பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Amjad Gulzar அவர்கள், இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிலிருந்து வெளியேறும் மக்களுக்கு, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்போடு இணைந்து, காரித்தாஸ் அமைப்பு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் ஆற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு, தேவையில் இருக்கும் அண்டை நாட்டவருக்கு உதவுவதற்கு, பாகிஸ்தான் தன் எல்லைகளைத் திறந்துவிடுவதற்கு தார்மீகப் பொறுப்பைக் கொண்டிருக்கின்றது, மற்றும், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மதிக்கப்படுவது உறுதிசெய்யப்படவேண்டும் என்றும், Gulzar அவர்கள், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் குறித்த 1951ம் ஆண்டின் ஜெனீவா ஒப்பந்தம், மற்றும், 1967ம் ஆண்டின் ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் பாகிஸ்தான் நாடு கையொப்பம் இடவில்லை. ஆயினும், பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு, 1970ம் ஆண்டிலிருந்து ஆப்கான் புலம்பெயர்ந்தோருக்கு மனிதாபிமான உதவிகளை ஆற்றிவருகிறது.

ஆப்கானிஸ்தான்  புலம்பெயர்ந்தோர்
ஆப்கானிஸ்தான் புலம்பெயர்ந்தோர்

UNHCR எனப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் கணிப்புப்படி, பாகிஸ்தானில் ஏற்கனவே 14 இலட்சம் ஆப்கான் புலம்பெயர்ந்தோர் வாழ்ந்துவருகின்றனர். Khyber Pakhtunkhwa மாநிலத்தின் வடபகுதியில் இம்மக்களுக்காக 43 முகாம்கள் உள்ளன.

ஆப்கானிஸ்தானில், கடந்த இருபது ஆண்டுகளாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள், திருப்பி அழைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது, அந்நாட்டில், தாலிபான் இஸ்லாமிய குழு, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2021, 15:05