தேடுதல்

ஏமன் நாடு விரைவில் ஒரு பாலைநிலமாக மாறும் என்று கூறும் அறிக்கை ஏமன் நாடு விரைவில் ஒரு பாலைநிலமாக மாறும் என்று கூறும் அறிக்கை 

உலக மனிதாபிமான நாளையொட்டி, காரித்தாஸ் செய்தி

பல்வேறு நெருக்கடிகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில் நாம் கடைபிடிக்கும் உலக மனிதாபிமான நாளில், ஒருங்கிணைந்த மனிதாபிமான சூழல் ஒன்றே நமக்கு முன்னிருக்கும் ஒரே தீர்வு என்பதை அனைவரும் உணரவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு நெருக்கடிகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில் நாம் கடைபிடிக்கும் உலக மனிதாபிமான நாளில், ஒருங்கிணைந்த மனிதாபிமான சூழல் ஒன்றே நமக்கு முன்னிருக்கும் ஒரே தீர்வு என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 19 இவ்வியாழனன்று, உலக மனிதாபிமான நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, தன் செய்தியை வெளியிட்டுள்ள காரித்தாஸ் அமைப்பு, அண்மைய நாள்களில் மனிதர்களின் செயல்பாடுகளாலும், இயற்கைப் பேரிடர்களாலும், இவ்வுலகம் சூழப்பட்டுள்ளதை இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்களிடம் வீழ்ந்தது, 1500க்கும் அதிகமானோரை பலிவாங்கிய ஹெயிட்டி நாட்டின் நிலநடுக்கம், ஆகியவற்றையும், லெபனோன், உக்ரைன், வெனிசுவேலா, சிரியா ஆகிய நாடுகளில் தொடர்ந்துவரும் அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவற்றையும், அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் மீண்டும் சீரமைக்க முடியாதவண்ணம் நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றத்தின் பிரச்சனைகளால் அதிகரித்துவரும் புலம்பெயந்தோர் பிரச்சனை, அத்துடன், கடந்த ஓராண்டுக்கு மேலாக மனித சமுதாயத்தை வதைத்துவரும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் ஆகியவற்றின் விளைவுகளும், இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உலக அரசுகள் ஒவ்வொன்றும், தங்கள் சொந்த நலனை முன்னிறுத்தி எடுக்கும் முடிவுகளால், உலகில் மிகவும் பின்தங்கிய நாடுகளில் வாழும் வறியோர் பல்வேறு துன்பங்களை அடையவேண்டியிருப்பதை, ஆப்கானிஸ்தான் நமக்கு வெகுத்தெளிவாக உணர்த்திவருகிறது என்று, காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்கனவே அரசியல் தளத்தில் மிகவும் நிலையற்ற ஒரு கட்டத்தில் இருக்கும் ஹெயிட்டி நாட்டில், இயற்கையின் சீற்றமாக நடைபெற்ற நிலநடுக்கம், மனித சமுதாயத்திற்கு ஒரு பெரும் மனிதாபிமான சவாலாக அமைந்துள்ளது என்று காரித்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகாரத்தில் இருக்கும் அரசுத்தலைவர்கள், மிகவும் வறிய நிலையில் இருப்போரை முன்னிறுத்தி, உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கவில்லையெனில், மாற்றங்கள் ஏற்படாது என்பதைக் கூறும் இச்செய்தியில், வரவிருக்கும் COP26ல் அரசியல் முடிவுகள் மிகவும் உறுதியாக எடுக்கப்படவேண்டும் என்ற அழைப்பும் முன்வைக்கப்பட்டுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2021, 14:50