தேடுதல்

செய்தியாளர்களிடம் பேசும் கர்தினால் மால்கம் இரஞ்சித் - கோப்புப் படம் செய்தியாளர்களிடம் பேசும் கர்தினால் மால்கம் இரஞ்சித் - கோப்புப் படம்  

அரசு விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளில் நம்பிக்கையில்லை

கர்தினால் இரஞ்சித் : 2019ம் ஆண்டு இயேசு உயிர்ப்புப் பெருவிழாவன்று கோவில்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த இலங்கை அரசுத்தலைவரின் விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு, இயேசு உயிர்ப்புப் பெருவிழாவன்று கோவில்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசுத்தலைவர் அந்நாட்டுத் திருஅவை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என  அறிவித்துள்ளார், கர்தினால் மால்கம் இரஞ்சித்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து, இதுவரை நடைபெற்றுள்ள விசாரணைகள் பற்றிய விளக்கங்களைக் கேட்டு, இலங்கை ஆயர்கள் அனுப்பியக் கடிதத்திற்கு, அரசுத்தலைவர் கோத்தபாய இராஜபக்சா அவர்கள் அனுப்பியுள்ள பதில் கடிதம், சரியான விளக்கத்தைத் தரவில்லை எனக்கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், உயிர்ப்பு ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனவும் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்க கோவில்கள் தாக்கப்பட்டது குறித்து முறையான விசாரணைகள் இடம்பெறவில்லையெனில், இலங்கை திருஅவை வேறு விதங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை வெளிப்படுத்தி 19 பக்க கடிதம் ஒன்றை இலங்கை ஆயர்கள் அரசுத்தலைவருக்கு அனுப்பியிருக்க, தற்போது அதற்கு அரசுத்தலைவரால் பதில் வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் கேள்விகளுக்கு அரசுத்தலைவரின் கடிதத்தில் சரியான பதிலில்லை எனக்கூறும் கர்தினால் இரஞ்சித் அவர்கள், ஒரே அரசியல் கட்சியின் அங்கத்தினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளின் வழியே, உண்மை வெளிவரும் என தான் நம்பவில்லை என மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கொழும்பு உயர்மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வளவு காலம்தாழ்த்தி விசாரணைகளை நடத்துவது, அரசின் ஆர்வமின்மையை வெளிப்படுத்துவதாகவும், இந்த வழக்கு குறித்து அரசு தன் கைகளைக் கழுவிவிடும் என்பதே, இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டின் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா வெடிகுண்டுத் தாக்குதலிலிருந்து உயிர்பிழைத்த ஆண்டனி பெர்னாண்டோ என்பவர் கூறுகையில், ஒரே மாதத்தில், இத்தாக்குதலுக்கு காரணமாவர்களை கைதுசெய்வோம் என்ற வாக்குறுதியுடன் பதவிக்கு வந்தவர்கள், தற்போது 28 மாதங்களாக மௌனம் காத்துவருகின்றனர் எனவும், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இந்த அரசே இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், இவ்வழக்கு அனைத்துலக நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2021, 14:07